சொல்லித் தீராத சங்கிலி
-----------------------------------
எறிகல்லோடு சேர்ந்து வீழ்ந்த தாரகையொன்று
வர்ணத் திரைச்சீலைக்கப்பால்
சமையலறையில் உறைகிறது
வரவேற்பறையிலிருந்து எழும்புகின்றன படிக்கட்டுக்கள்
யன்னலால் எட்டிப் பார்க்கும் வெயிலுக்கு
ஏறிச் செல்லப் பாதங்களில்லை
கூடத்தில்
வீட்டின் பச்சையைக் கூட்டுகிறது
பூக்கள் பூக்காச் சிறு செடியொன்று
காலணி தாங்கும் தட்டு
தடயங்களைக் காக்கிறது
ஒரு தண்ணீர்க் குவளை
தோலுரித்த தோடம்பழச் சுளைகள் நிறைந்த பாத்திரமொன்று
வாடாத ஒற்றை ரோசாப்பூவைத் தாங்கி நிற்கும் சாடி
வெண்முத்துக்கள் சிதறிய மேசை விரிப்புக்கு
என்னவோர் எழில் சேர்க்கின்றன இவை
பிரகாசிக்கும் கண்கள்
செவ்வர்ணம் மிகைத்த ஓவியமொன்றென
ஆகாயம் எண்ணும்படியாக
பலகை வேலிக்கப்பால் துள்ளிக் குதித்திடும்
கறுப்பு முயல்களுக்குத்தான் எவ்வளவு ஆனந்தம்
எந்த விருந்தினரின் வருகையையோ
எதிரொலிக்கிறது காகம்
அவர் முன்னால் அரங்கேற்றிடவென
வீட்டைத் தாங்கும் தூண்களிரண்டின் இதயங்களுக்குள்
ஒத்திசைவான நாடகமொன்று ஒத்திகை பார்க்கப்படுகிறது
இரவின் அந்தகாரத்துக்குள் ஒளிந்துபோன
காதலின் பெருந்தீபம்
சொல்லித் தீராத சங்கிலியொன்றோடு
மௌனத்தைப் பிணைத்திருக்கிறது
என்னிலும் உன்னிலும்