அகதிப் பட்சி.. முக்காட்டு தேவதைகள்

01.
அகதிப் பட்சி
----------------------

அப்பாரிய மலைகளைத் தாண்டிய வனாந்தரத்தின்
பெரு விருட்சமொன்றின் பரவிய கிளைகளில்
குச்சுக்களால் வேயப்பட்டு
எமக்கென்றொரு அழகிய கூடிருந்தது
இணைப்பறவைகள் சேர்த்துக் கட்டிய வீட்டில்
அழகாய்ப் பிறந்து கீச்சிட்டேனாம்
இரை திரட்டி வந்த அன்னைப் பட்சி
தொண்டைக்குள் வைத்தழுத்திய உணவு காயும் முன்
வேட்டைப் பறவையொன்றின்
வஞ்சகம் சூழ்ந்த விழிகளிலே விழுந்திட்டேன்
இறகுகள் இருக்கவில்லை
வில்லங்கங்கள் தெரியவில்லை
விசித்திர வாழ்க்கையிதன்
மறைவிடுக்குகள் அறியவில்லை
அன்னை அருகிலாப் பொழுதொன்றில்
சாத்தானியப் பட்சி காவிப்பறந்திற்று என்னை
கூரிய சொண்டுக்குள் என்
தோள் கவ்விப் பறக்கும் கணம்
மேகங்கள் மோதியோ
தாயின் கண்ணீர்ப் பிரார்த்தனையோ
எப்படியோ தவறிட்டேன்
கீழிருந்த இலைச் சருகுக்குள்
வீழ்ந்து பின் ஒளிந்திட்டேன்
அடை காத்தவளும் வரவில்லை - பின்னர்
காவிச் சென்றவனும் வரவில்லை
எப்படி வளர்ந்தேனென்று
எனக்கும் தெரியவில்லை
இறகுகள் பிறந்தன
தத்தித் தத்திப் பறக்கக் கற்றேன்
இன்று புராதன நினைவுகளைத் திரட்டியெடுத்து
வலிமையான குச்சிகள் கொண்டு
எனக்கொரு வீடு கட்டுகிறேன்
விஷப் பறவைகள் காவிப்பறக்க இயலா
உயரத்தில் உருவத்தில்
விசித்திரமான கூடொன்று கட்டுகிறேன்
கூரிய சொண்டுகளால் தோள் கவ்வும் வலி
என் குஞ்சுகளுக்கு வேண்டாம்

02.
முக்காட்டு தேவதைகள்
-----------------------------

தீயெரித்த வனமொன்றின்
தனித்த பறவையென
வரண்டு வெடித்த நிலமொன்றின்
ஒற்றைச் செடியென
சாக்காட்டுத் தேசமொன்றிலிருந்து
உயிர் பிழைத்தவள்
நிறைகாதலோடு காத்திருக்கிறாள்
அவன் சென்ற அடிச்சுவடுகளில் விழிகள்
சோரச் சோரச் சொட்டுச் சொட்டாய்க்
கண்ணீர் தூவி நிறைத்து
பொழுதனைத்தும் துயர்பாடல்கள் இரைத்து
எண்ணியெண்ணிக் காத்திருக்கிறாள்
பிரவாகங்கள் சுமந்துவரும் வலிய கற்களும்
ஒலிச் சலனத்தோடு நகர்கையில்
தொன்ம விடியலொன்றில் நதியோடு மிதந்த
இலையொன்றின் பாடல்கள் குறித்துக்
காற்றிடமோ நீரிடமோ குறிப்புகளேதுமில்லை
அவளது தூய காதல் குறித்தும்
அவளைத் தவிர்த்துக்
குறிப்புகளேதுமற்றவளானவளிடம்
ஏதும் கேட்டால்
வெட்கம் பூசிய வதனத்தை
திரையை இழுத்து மூடிக் கொள்கிறாள்
நிரம்பி வழியத் தொடங்கும் கண்களையும்
அவன் போய்விட்டிருந்தான்
அச்சாலையில் எவரும் போய்விடலாம்
மிகுந்த நம்பிக்கைகளைச் சிதைத்து
ஏமாற்றங்களை நினைவுகளில் பரப்பி
துரோகங்களால் போர்த்திவிட்டு
அவனும் போய்விட்டிருந்தான்
அதைப் போல எவரும் போய்விடலாம்
தூய தேவதைகள் மட்டும்
என்றோ போனவனை எண்ணிக்
காத்திருப்பார்கள் என்றென்றும்

பிரசுரிக்கப்பட்ட திகதி: 2010-04-01 00:00

கருத்துகள்

மிக அருமையான கவிதைகளை ரிஷான்ஷெரீப் அண்ணன் படைத்து வருவது பாராட்டத்தக்கது. அந்தவகையில் அவருடைய கவிதைகள் நல்ல பாடுபொருளைக் கொண்டிருப்பது மேலும் சிறப்பளிக்கிறது. rnஇராமசாமி ரமேஷ்rn அளம்பில்.

ரவி(சுவிஷ்) அவர்கள் எழுதிய போய்வா அம்மா...போய்வா கவிதை உண்மையிலேயே என் மனதை மிகவும் பாதித்தது. தனது தாயாருக்காக அவர் எபுதிய அந்த ஒவ்வொரு வரிகளும் உணர்ச்சிகளை அபரிமிதமாக காட்டி நமது இதயத்தை கீறுகின்ற வரிகளாக இருக்கின்றன. எனவே இந்த அம்மாவின் கிதையைத்தந்த ரவி அவர்களை வாழ்த்துகிறேன்.rn இராமசாமி ரமேஷ்rn அளம்பில்rn இலங்கை.

இரா.சனத் என்ற இளையகவிஞர் நமது வார்ப்பு கவிதைகளின் சங்கமத்தில் தன்னையும் "மலருமா நம் வாழ்வில் எழுச்சி'' என்ற கவிதையினூடாக இணைத்துக்கொண்டுள்ளார். அவர் தனது கன்னிக்கவியிலே சொல்லவந்த விடயம் நமது மக்கள் பிரச்சினை. அவரது சொல்லாடல்களின் மூலம் அவர் நல்லதொரு கவிஞராக மிளிர்வதற்கான சாத்தியப்பாடுகள் அதிகமாய் உள்ளன. ஆகவே தடைகளை உடைத்து இந்த விதை வீரியமாய் வளர்ந்து இலக்கியச்சோலையை அலங்கரிக்கவேண்டும் என வாழ்த்துகிறேன்.rnrn இராமசாமி ரமேஷ்rn அளம்பில். இலங்கை.rn rn

Share with others