பெருநகரப் பூக்கள்.. இடர்மழை
01.
பெருநகரப் பூக்கள்
-----------------------
தனித்தனியாகப் பிரிந்துசெல்லும்
பாதைகள் வழியும்
அடர்காட்டுக்குள்ளும்
பூத்துக்கிடக்கின்றன
சில வனாந்தரப்பூக்கள்
வாசத்தைப் பரப்பும்
பூக்களை ரசிக்கவோ
பூசைக்கென்று கொண்டாடவோ
யாருமற்ற வெளியிலும்
இயல்பினை மறக்காமல்
தத்தம் பாதையில் வெகு ஆனந்தமாக
பூத்துக்கொண்டே இருக்கின்றன
இயற்கையின் பன்னீர்த்தூவல்
ஒளிக்கீற்றின் களி நர்த்தனம்
இலை மிகுக்கப் பச்சையங்கள்
வட்டமிட்டபடியே சுற்றிவரும் தேன்குருவி
அனைத்தும் மிகைத்துக் கிடக்க
காட்டுப் பூக்களுக்குக் கவலையேதுமில்லை
ஒளி மறுக்கப்பட்டுக்
குளிர்விக்கப்பட்ட அறையில்
பூ மலர்ந்தபொழுதில்
தொட்டிச் செடிக்கு மனதும் வலித்தது
மூன்றாவதாகப் பிறந்ததும் பெண்ணாம்
02.
இடர்மழை
-------------
நமக்கிடையே வான் தெளித்த
அடர்த்தியான மழையைத் தவிர்த்து
வேறெவருமிருக்கவில்லை
தூறல் வலுத்த கணமது
வீதியின் ஒரு புறத்தில் நீ
இதுவரை கவிழ்ந்திருந்த தலையை
முக்காட்டுக்குள்ளிருந்து நிமிர்த்தி
எதிரே வருமென்னைப் பார்க்கிறாய்
காற்றடித்து வலுத்த மழைக்குத் தப்பியோட
நானிருக்கும்போது நீ முயற்சிக்கவில்லை
உன் நாணத்தை முழுமையாக வழித்தெறியத்
தூறலுக்குத் தெரியவுமில்லை
உன்னிடமோ என்னிடமோ
அந்திவேளையின் மழையை எதிர்பார்த்த
குடைகள் இல்லை
வானிலிருந்து பொழியும் நீர்த்துளிகளைத் தடுக்க
மேனிகளுக்குத் தெரியவுமில்லை
இத்தனைகள் இல்லாதிருந்தும்
ஆண்மையென்ற பலமிருந்து நான்
அருகிலிருந்த என் வீட்டிற்கு ஓடுகிறேன்
காற்சட்டையில் சேறடித்திருக்கக்
கவலையேதுமில்லை
தேய்த்துக் கழுவ அம்மா இருக்கிறாள்
நான் மறையும்வரை காத்திருந்து நீயும்
புத்தகங்களை நெஞ்சில் அணைத்து
பேருந்து நிறுத்தம் நோக்கி
ஓடத்துவங்குகிறாய்
திரைக்காட்சிகளில் வரும்
அழகிய இளம்பெண்களின்
மழை நடனங்கள் பற்றிய கனவுகளோடு
யன்னல் வழியே பார்க்கிறேன் உன்னை
ஆங்காங்கே ஒழுகிவழியும்
பேரூந்து நிறுத்தத்துக்குள்
நீ முழுவதுமாக நனைந்திருக்க
அடிக்கடி பின்னால் திரும்பி
சேற்றோவியம் வரைந்திருந்தவுன்
நீண்ட அங்கியைக் கவலையுடன்
பார்த்தவாறிருக்கிறாய்
தேய்த்துக் கழுவுவது நீயாக இருக்கக்கூடும்