உன்னால் வீண்பழி சுமந்தவனின் அறை
------------------------------------------------
காதல் வானத்திலேறி
இதய வானவில்லில் குதித்து அதன்
நிறமிழந்த பகுதிகளுக்கு
நீ சாயமடித்த பொழுதில்தான்
என்னறைக்கு உதிர்ந்திருக்கவேண்டும்
சூழ விழுந்தவற்றை
எனதிருப்பிடம் வந்த பாதங்கள்
வஞ்சகமாய்க் கொண்டுவந்து சேர்த்தன
அந்தரத்தில் நின்றவற்றை
அவதூறு சுமந்த காற்று
அள்ளி வந்து தெறித்தது
உன் தவறால்
பெரும்பாரமாய் அழுத்தும்
வண்ணங்களால் நிறைந்ததென்னறை
என் தவறேதுமில்லையென மெய்யுரைக்க
பட்சிகளையும்இவண்ணாத்திகளையுமழைத்து
செட்டைகளில் வண்ணங்களை
வழிய வழிய நிறைத்து
பூமிதோறும் வனங்கள் தோறும்
காணும் பூக்களுக்கெல்லாம்
கொடுத்து வரும்படியனுப்பியும்
இன்னும் வண்ணங்கள் குறைவதாயில்லை
அறை முழுதும்
சிதறிக்கிடக்கின்றன
நீ தெறித்த வண்ணங்கள்
மௌனத்தின் வண்ணத்தை மட்டும்
நான் முழுதும் பூசிக்கொள்கிறேன்
எஞ்சிய வண்ணங்களை
நீயேயள்ளிக் கொண்டுபோ
-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.