எனக்கு எத்தனை முகங்கள்
--நிந்தவூர் ஷிப்லி

எனக்கு எத்தனை முகங்கள்
என்று எனக்கே தெரியவில்லை

இரண்டு முகங்கள் இருப்பதாக
நண்பர்கள் குழப்புகிறார்கள்
எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது
பேரூந்துகளில்
பெண்களை நெருங்கும்போது
மூன்றாவது முகமொன்றை
மெல்லமாய் கண்டுகொள்கிறேன்

கடன்பட்ட பிறகு
நான்காவது முகத்தை
நானே அடையாளம் கண்டேன்

தனிமையில் ஐந்தாவது
அழுகையில் ஆறாவது
அலைபேசியில் ஏழாவது
இணையத்தில் எட்டாவது
இப்படி நீண்டுகொண்டே போகின்றன
எனது முகங்கள்....

நானாக விரும்பி
எதையும் அணிவதில்லை
அவ்வப்போது அந்தந்த முகங்கள்
என்னை உள்வாங்குகின்றன.

இவைகள் முகங்களாக அன்றி
முகமூடிகளாகக்கூட
இருக்கலாம்.

என்ன ஒரு வேடிக்கை...
யோக்கியன் என்று உலகம்
நம்பிக்கொண்டிருக்கும் எனக்குள்
அயோக்கியன் ஒருவன்
நிரந்தரமாய் தங்கியிருக்கிறான்....

சிரிக்கிறேன்
கோபப்படுகிறேன்
தாகிக்கிறேன்
சலனம் கொள்கிறேன்
பொய் பேசுகிறேன்
துரோகமிழைக்கிறேன்
காதல் செய்கிறேன்
முத்தமிடுகிறேன்
கவிதை வரைகிறேன்
அடேயப்பா
எனக்குள் இன்னும் எத்தனை முகங்களோ..?

பாருங்கள்
எனக்கு ஒரே ஒரு முகம்
என்பது எத்துணை பெரிய பொய்...!?

எனக்கு எத்தனை முகங்கள்
என்று எனக்கே தெரியவில்லை

- நிந்தவூர் ஷிப்லி

பிரசுரிக்கப்பட்ட திகதி: 2008-10-12 00:00
Share with others