கானல் நிழலில் இளைப்பாறும் சிங்கங்கள்
----------------------------------------------------------
கனவுகள் பிடுங்கப்பட்ட இந்த நகரம் பற்றி
புதையுண்ட சடலங்கள் ஏராளமான கதைகளை
காற்று வெளியில்
பேசிக்கொண்டேயிருக்கிறது ஏகாந்தமாய் ஆழ்ந்த ஏகாந்தமாய்..
நெருப்பில் எரிந்தபோன ஒரு இனத்தின் வரலாறும்
நூற்றாண்டுகளாய்த்தொடர்ந்த ஒரு யுகத்தின் முடிவிடமும்
இந்த நகரின் மத்தியில் சாம்பலானது
சடலங்களோடு சடலங்களாய்..
இன்றும் என் செவிகளில் கர்ச்சிக்கிறது
மனிதத்தை மனிதம் தின்றும் கொன்றும் அடக்கியும் முடக்கியும்
கொக்கரித்து எக்காளமிட்டபோது தண்ணீர் தண்ணீர் என்று கதறி அழுத
எத்தனையோ ஆயிரம் குரல்களின் பரிதவிப்பும் பதைபதைப்பும்..
வனப்பு நிறைந்த நிலத்தின் மேற்பரப்பில்
பேரவலங்கள் நடந்து கொண்டிருந்தபோது சாட்சியாய்
இருந்ததது அந்த ஆகாயம் ஒன்றுதான்..
தொலைந்து போன உறவுகளும்
மூர்ச்சையான உணர்வுகளும்
அடையாளமிழந்த மனித இருப்புக்களும்
அபிவிருத்தி என்ற இரும்புக்கால்களினால் நசுக்கப்படுவதை
பார்வையாளர்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்..
சுயமிழந்த உரிமைக்குரல்களின் குரல்வளைகள்
அறுக்கப்பட்ட அடையாளமாய்
சிதறிக்கொண்டிருக்கின்றன சில பல குருதித்துளிகள்..
வேட்டையாடி முடிந்த பின்னர்
சிங்கங்கள் இளைப்பாறத்தொடங்கியிருக்கின்றன
பணத்தினதும் புகழினதும் கானல் நிழலின் கீழ்..
கடைசியாய் ஒள்றைச்சொல்லத்தோன்றுகிறது
புத்தரும் போதிமரமும் மலிந்து போன நாட்டில்
இன்னும் ஏன் 'அவர்களுக்கு' ஞானம் வரவில்லை ????