கைவிடப்பட்டவள் - 02
------------------------------
இனி சந்திப்பதேயில்லை என்கிற
தீர்க்கமான முடிவுடன் முடிந்துபோனது
கைவிடப்பட்ட அந்தப்பெண்ணுடனான
இரண்டாவது சந்திப்பு..
ஒரு நீண்ட மௌனத்தை
உடைந்த வார்த்தைகளால்
கலைத்தபடி
கண்ணீருடன் பேசத்தொடங்கினாள்..
ஷெல் விழுந்த இரவுகள்
துப்பாக்கி முனைக்கைதுகள்
கடத்தப்பட்ட பெண்கள்
அநாதையான குழந்தைகள்
அவயவம் இழந்த உறவுகள்
இடிந்து போன வீடுகள்
நொறுங்கிப்போன கனவுகள்
இப்படி
கற்பனைகளால் கூட நினைக்கவொண்ணா துயரங்களுடன்
எங்கள் உரையாடல் தொடர்ந்தது..
அவள் கற்பழிக்கப்பட்ட அந்த இரவு பற்றி
என்னவெல்லாமோ சொன்னாள்..
அவள் கண்ணீரை மொழிபெயர்க்க முடியாமல்
அவள் துயரங்களை மொழியாக்க தெரியாமல்
மிகப்பெரும் வேதனை வெளியொன்றில்
என் மனச்சாட்சியை அலைய விடுகிறேன்..
திடீரென உடைக்கப்பட்ட அவள் வீட்டுக்கதவு வழியே
நான்கோ ஐந்தோ துப்பாக்கி ஏந்திய
புத்தரின் வம்சத்தினர் நுழைந்ததாயும்
அம்மாவையும் தம்பியையும்
தூணொன்றில் கட்டிவிட்டு
விடியும் வரை அவள் பெண்மையை
மீண்டும் மீண்டும் கொடூரமாக களவாடியதாகவும்
அவள் சொல்லிக்கொண்டிருந்தபோது மீண்டுமொரு முறை குற்றவாளியாகிறேன் நான்..
நான் மட்டுமல்ல
நீ
அவன்
அவள்
அவர்கள்
இவன்
இவள்
இவர்கள் என எல்லோருமே குற்றவாளியாகிறொம்..
மன்னிக்கவே முடியாத குற்றவாளியாகிறோம்..
புத்தருக்கு ஞானம் வந்தென்ன லாபம்? அவர்
பக்தர்களுக்கு ஈனமே இல்லையே????
இழக்கக்கூடாத எல்லாவற்றையும்
இழந்த ஒருத்தியை
இனியொரு போதும் நீங்கள் சந்திக்க வேண்டாம்..
செவிப்பறையில் அறையும் அவள் வார்த்தைகள்
உங்கள் இதயத்தைப்பிடித்து உலுக்குவதையும்
அடுத்து வரும் நாட்களில்
நீங்களொரு நடைப்பிணமாய் உருமாறுவதையும்
தவிர்க்கவே வேண்டுமெனில்
இழக்கக்கூடாத எல்லாவற்றையும்
இழந்த ஒருத்தியை
இனியொரு போதும் நீங்கள் சந்திக்க வேண்டாம்..
புத்தருக்கு ஞானம் வந்தென்ன லாபம்? அவர்
பக்தர்களுக்கு ஈனமே இல்லையே????
அருமை நண்பரே....