என் தேசத்தில் இது கிளையுதிர்காலம்...
------------------------------------------
இலையுதிர் காலம் முடிந்து
இப்போது இங்கே
கிளையுதிர்காலம்...
தினமும் இயற்கை மரணத்தை விட
செயற்கை மரணம் மலிந்து போன
மண் இது...
சுவாசப்பைகளும்
இருதயத்துடிப்பும்
பலவந்தமாய் பிதுங்கியெறியும் கைகளை
குலுக்கிக்கொண்டிருக்கின்றன
சில ராட்சசக்கைகள்..
எம்மண்ணுமே இங்கே
செம்மண்தான்
குருதித்துகள்கள்
கலந்து போனதால்...
குழந்தைகள்
தாலாட்டு
தொட்டில்
மூன்றும் தலைகீழாகி இப்போது
சடலங்கள்
ஒப்பாரி
பாடை
எங்கள் ரணங்களை
உங்களுக்கெல்லாம் புரிய வைக்க
எந்த உவமைகளை தேடிப்பிடிப்பது...?
ஆயுதங்களும்
ஆயுதங்களும் மோதுகின்றன..
அப்பாவிகளை இடைநடுவில் நிறுத்திக்கொண்டு...
அவர்கள் கூற்றுப்படி இது
சமாதானத்துக்கான போராட்டமாம்..
இவர்கள் கூற்றுப்படி இது
வன்முறைக்கெதிரான போராட்டமாம்...
எங்கள் கூற்றை யார் கேட்கிறார்கள்...?
எனது தேசத்தின் வரலாறு
சிதறி விழும்
மனித உயிர்களின்
குருதியினால் தத்ரூபமாக வரையப்பட்டுக்கொண்டிருக்கிறது..
எப்போதோ ஓர் நாளில்
இங்கு சமாதானம்
மலரத்தான் போகிறது.
எல்லோரும் இறந்து போன பின்......
கிளையுதிர்காலம் முடிந்து
இன்னும் சில நாட்களில்
தோன்றக்கூடும் வேரறுகாலம்....
அப்போது
எலும்புக்கூடுகளும்
மண்டையோடுகளுமே
எஞ்சியிருக்கும்....
-நிந்தவூர் ஷிப்லி
கருத்துகள்
வணக்கம் நண்பரே....
உங்கள் பின்னூட்டத்துக்கு நன்றிகள் கோடி
போராட்டம் பற்றியோ அதன் உள்ளார்ந்தம் பற்றியோ அந்தப்போராட்டம் நிகழும் அக புற காரணிகள் பற்றியோ இந்தக்கவிதையில் நான் பேசவில்லை..
யுத்ததத்தினால் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்படுவதையே இதில் சித்தரித்துள்ளேன்..
அவர்கள் இவர்கள் என்ற அரூபச்சொற்கள் சாற்றி நிற்பது யுத்தம் புரிபவர்களையே அன்றி மற்றவர்களை அல்ல நண்பரே...யாரையும் நேரடியாகத்தாக்கி எழுதுவது நாகரிகமில்லை...இந்த யுத்தம் பற்றி hலரும் பல கருத்துக்களை கொண்டிருக்கிறார்கள்.அதில் எனது கருத்தே இது.
இது புனிதமான போராட்டம் என்கிற உங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.ஆனால் அப்பாவிகளின் இரத்தம் உறுஞ்சப்படுவதை எப்படி புனிதம் என்பது..??
இந்தக்கவிதையைப்படித்த சிலரின் பின்னூட்டங்களை உங்களுக்குத்தருகிறேன்..
எஸ்.எம். சுனைத் ஹஸனீ
சுலபமாய் வலியை ஏற்றுகிறீர்கள் படிப்பவர்கள் உள்ளத்தில். கவலைகளை கவிதை அருமை என்று கூறி மேல் பூச்சு பூசிட மனம் ஒப்ப வில்லை. இறைவன்தான் அருள் புரிய வேண்டுமென்று கையாலாகாதவர்கள் பிரார்த்திப்பது போல் நானும் பிரார்த்திப்பதைப் போல் வேறு வழி தெரிய வில்லை எனக்கு.
அமரன்
நாளை மறுதினம் செஞ்சோலைத் தளிர்கள் கிளையுடன் தறிக்கப்பட்ட துயரநாள். அத்தைகையவற்றை நிழல்படுத்திக் காட்ட வரிகளை நிரல்படுத்தி உள்ளீர்கள் கவிதையாக..
கவிதையின் கரு ஆயுதங்களுக்கு நடுவில் அப்பாவிகள் என்பது.. உலகளாவியப் போரின் உண்மை நிலை கருவானதில் கவிதை கனமாகிறது.
ஒவ்வொரு வார்த்தையும் கருவை வலிமையாக இதயத்தில் இறக்குகின்றன. எம்மண்ணும் செம்மண் எனும் இருமுக சொல் கண்விரிக்க வைத்தால் ஆதிகாலத்தையும் அந்திம காலத்தையும் கோர்த்த இடத்தில் மூடிக்கொள்ளும் கண்களில் கோர்க்கப்படுகிறது நீர்..
இரண்டாவது பந்தியில் கடிபடுகிறது கல். என் புரிதலில் தவறோ.. அல்லது வார்த்தைகளை வளைத்த விதத்தில் தவறோ தெரியவில்லை..
வலியை உணர்தவன்
அடுத்தவனை
காயப்படுத்த மாட்டான்...
உலகில் வலியை உணராதவன் இருக்க வாய்ப்பில்லையே... இருந்தும் ஏனிந்த நிலை...
கடைசிக்கு முதல் பந்தியில் நீங்கள் சொன்ன வேரறு காலத்தை சண்டை(யின் காரணம்) அறும் காலமாகஅர்த்தப்படுத்த தோன்றுகிறது.
யார் வாழ யுத்தம்..
யுத்த முடிவில் அவர்கள் இருப்பார்களா..
இருப்பார்கள்...
"அவர்கள்"வென்றால் அடையாளமின்றி..
"இவர்கள்"வென்றால் அடையாளத்துடன்..
அப்போதும் புரட்சி வெடிக்கத்தான் செய்யும் - கடல் கடந்து புதைக்கப்பட்ட விதைகளிருந்தாவது..
அப்போதாவது விடுபடுபா நிரந்தர விடுமுறை ஆயுதங்களுக்கு..
விடுபடலாம்... ஒவ்வொரு குடிமகனுக்கும் உண்மை நிலவரம் தெரிந்தால் விடுபடலாம்.. இப்போதும் தான்..
சிவா.ஜி
விருட்சங்கள் வெட்டப்பட்டு...இந்த தருபூமியெல்லாம்இ மருபூமியாவதற்குள்...கொடியவரின் கைகளிலிருந்து அந்த கொலைவாளை யாராவது பறித்தெறிய மாட்டார்களா.? வலியுணர்த்தும் வரிகள் ஷிப்லி
ஷீ-நிசி
ஒவ்வொன்றும் மிக வீரியமான வரிகள்.... உங்கள் மனத்தின் இரணங்கள் ஆறட்டும்! தேசத்தில் அமைதி திரும்பட்டும்!
வசீகரன்
எவ்வளவு வலியும்.. வேதனைகளும் தெரித்திருக்கும் வரிகள்..இ மனதில்
இருக்கும் ஆராத ரணங்களின் குமுறல்களின் வெளிபாடுகள்...
எனக்கு இங்கே உங்கள் கவிதை வரிகளை பாராட்டுவதற்க்கு மனதே
வரவில்லை ஷீப்லி அண்ணா.. சுனைத் ஹஸனீ அவர்கள் வேதனையாக
தெரிவித்திருக்கும் உண்மை கருத்துக்களை தான் நானும் சொல்லிக்கொள்கிறேன்..!
நிச்சயமாக எனக்கு மனம் கனத்துவிட்டது..!
கவிதையின் கருவின் சரியான பின்புலத்தை விளங்கிய பிறகு யுத்தம் பற்றி விவாதிக்க அழைப்புத்தாருங்கள்.கொஞ்சம் நிதானமாக எனது மற்றைய கவிதைகளையும் படியுங்கள்.நான் பொதுமக்களுக்காக பேசுபவன்.பககச்சார்பில் இல்லை நண்பரே...
அன்புள்ள ஷிப்லி
உங்கள் கவிதையில் குறிப்பிடத்தக்க இந்த வரிகள் தெளிவில்லாத கருத்தை தருகிறது?
---------------------------------------------
இன்றைய சூழலில் இங்கு நடக்கிற போருக்கு எதிரான ''தமிழ்மக்களின் பேராட்டம்'' உணர்பூர்வமானது. மரணங்களால் நிகழ்கிறது. கண்ணீரால் நிகழ்கிறது?
//ஆயுதங்களும்
ஆயுதங்களும் மோதுகின்றன..
அப்பாவிகளை இடைநடுவில் நிறுத்திக்கொண்டு... //
தமிழர் தரப்பு மீது அரசு திணிக்கிற போரை எதிர்கொள்ளவேண்டிய கட்டாயம் எமக்கு திணிக்கப்படுகிறது.
குண்டுகள் எம்மீது போடும் பொழுதும் இடப்பெயர்வுகளின் பொழுதும் அவைகளுக்கு எதிராக போராடுகின்ற மனநிலையைத்தான் வெறியைத்தான் நாம் பெறுகின்றோம்.
//
அவர்கள் கூற்றுப்படி இது
சமாதானத்துக்கான போராட்டமாம்..
இவர்கள் கூற்றுப்படி இது
வன்முறைக்கெதிரான போராட்டமாம்... //
இங்கு நீங்கள் குறிப்பிடுகின்ற "அவர்கள்","இவர்கள்" என்ற அருபமான சொற்களில் ஒன்று சனங்களை கட்டாயம் குறித்தாக வேண்டும். நிச்சயமாய் இதை ஏற்றுக்கொள்ள முடியாது . நீங்கள் இரத்தம் பாயும் போர் நிகழும் இந்த மண்ணை வந்து பார்த்துச் செல்லுங்கள். புரிந்து கொள்ளமுடியும்.
உங்களிடமிருந்து பதிலையும் எதிர்பார்க்கிறேன்.
தீபச்செல்வன்