விலையேற்றமும் தடுமாற்றமும்
-------------------------------------------
குரல்வளை நெரிக்கும் விலையேற்றம்-எம்
குடும்பத்து வாழ்வில் தடுமாற்றம்-இனி
மனிதர்கள் முகங்களில் பெரும் வாட்டம்-இது
தினம் தினம் நிகழ்ந்திடும் போராட்டம்
கொஞ்சூண்டென்றால் சமாளிப்போம்-இது
கிடு கிடுவென்றால் என் செய்வோம்-நாம்
நமக்கள் மட்டும் விவாதிப்போம்-இதை
நாடெங்கும் உரைத்திட யோசிப்போம்
சொகுசாய் வாழும் சீமானே-இன்று
சிக்கலில் சிக்கிச்சீரழிய-அட
ஏழைகள் நாங்கள் என் செய்வொம்-இனி
ஒரு வேளைதான் சோறுண்போம்
சிரித்தால் கூட செலவாகும்-என்று
சிரிப்பை மறந்தே வாழ்கின்றோம்-பிறர்
வாழ்க்கை பற்றிக்கவலையில்லை-இது
விதியா?சதியா?தெரியவில்லை
ஐந்துக்கும் பத்துக்கும் அலைந்தோமே-இனி
ஐம்பது நூறைத்தேடணுமே-இன்னும்
இரண்டு மாதங்கள் போனாலே-நாம்
ஆயிரம் என்றே ஓடணுமே...
ஏன்தான் மண்ணில் பிறந்தோமோ..?-இந்த
கேள்விக்கு மட்டும் விடையில்லை-நம்
வாழ்க்கைச்செலவின் வளர்ச்சி மட்டும்-என்றும்
வளர்ந்தே செல்லத்தடையில்லை
தண்ணீர் குடிக்கவும் காசாச்சு-இனி
கண்ணீர் குடிக்கும் நாளாச்சு-இது
எதுவரை என்பது தெரியவில்லை-அது
தெரிந்தவர் யாரும் இங்கில்லை