எதார்த்தம்.. விட்டுக்கொடுத்தல்..தடங்கள்
01.
எதார்த்தம்
---------------
நான் இருந்தேன்
நீ வந்தாய்
நாம் ஆனோம்.
நீ சென்ற பின்னும்
நான் இருக்கிறேன்.
ஒன்று நீங்கிடில்
மற்றொன்றும்
உயிர் துறப்பது
பறவைகளில்
வேண்டுமானால்
பழக்கமாய் இருக்கலாம்.
மனிதனுக்குத்
தெரியும்
சேர்ந்துபோவதில் உள்ள
சிக்கல்கள்.
02.
விட்டுக்கொடுத்தல்
-----------------------
எவருக்கும்
இயலக்கூடும்.
காதலுக்காக
காதலியை
விட்டுக்கொடுத்தல்.
எவருக்கேனும்
இயன்றதுண்டோ?
காதலுக்காக
காதலையே
விட்டுக்கொடுத்தல்.
03.
தடங்கள்
------------
எப்போதும் போல்தான்
இருக்கிறது.
என்னையும் உன்னையும்
பிரித்த நிலா.
இப்போதும் முத்தமிட்டுக்கொண்டுதான்
இருக்கின்றன.
எதிர்வரும் அலைகளோடு
உள் வாங்கும் அலைகள்.
நீ விட்டுப்போன
தடங்களோடு நான்.
இங்கேயும் அங்கேயும்.
இன்றும் நீ வராமலே
இருந்திருக்கலாம்.
ஏனைய நாட்களைப் போல.
-செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி
உங்கள் கவிதைகள் காதலின் ஆளுமையை சிறப்பாகச் சொல்கிறதே!