உன் போலில்லை நான்.. முதிர்க்கன்னி
01.
உன் போலில்லை நான்
-----------------------------
என் முதுகுப்பக்கம்
செருகப்பட்ட
வாளின்
பிடியைச் சுமந்திருந்தது
உனது கைகளா..?
என்னை நோக்கி
ரண மழை
பொழிந்த மேகம்
உனது வானிலிருந்துதான்
வந்ததா?
இரவுகளில்
வலிக்க
வலிக்க
அழுதுகொண்டிருக்கும்
என் கண்ணீரின்
தீவிர ரசிகையா நீ
?
மனப்பரப்பில்
பிரளயம் செய்யும்
பூகம்ப அதிர்வுகள்
உன்னாலா நிகழ்கின்றன..?
நம்பவே முடியவில்லை
வளர்த்து விட்ட
பாகனையே
மதம் கொள்ளும் யானைகள்
கொல்லத்துணிவது போல
பின்னத்தொடங்கி விட்டாய்
எனக்கெதிரான
உன் சூழ்ச்சி வலைகளை..
உனது புன்னகைகளின்
பின்புலமாக
எனது
கண்ணீர்த்துளிகள்
இருக்குமாயின்
எனக்கொன்றுமில்லை
பொம்மையாகிறேன்
உனது கைகளில்
காரணம்
உன் போலில்லை
நான்
..!
02.
முதிர்க்கன்னி
----------------
கனவுகளோடு
விடியும் காலை
கனவாகவே
இருண்டு போகிறது
மொழி பெயர்க்கப்படாத
துயர்களின் வெளியீடாக
கன்னமெங்கும் கண்ணீர்
புன்னகையின் விலாசத்தை
இன்னும் விசாரித்துக்
கொண்டுதான் இருக்கின்றன
என் உதடுகள்
நொறுங்கிப்போன
உணர்வுகளைச் சுமந்தபடி
புயலழித்த பூவனமாய்
கிழிகிறேன் நான்
நேற்று
வினாடிகளாய்க் கரைந்தன
ஆண்டுகள்
இன்று
ஆண்டுகளாய்க் கரைகின்றன
வினாடிகள்
மஞ்சள் கயிறு
இருக்க வேண்டிய இடத்தில்
கிளிஞ்சல் கயிறு
ஒழுகும் உயிரின்
ஒவ்வொரு துளியிலும்
உலர்ந்தபடி
நாதஸ்வரமும்
மேளதாளமும்
இனி
மணமுடிக்க
மனிதன் தேவையில்லை
மரணமே
நீ
இருக்கிறாய்
-நிந்தவூர் ஷிப்லி
உங்கள் கவிதைகள் சிறப்பாகப் பேச முயற்சிக்கின்றன. வாழ்துக்கள்.