அசைவின்றி ஒரு பொழுது.

ஞாயிற்றுக்கிழமை
நேரம் நான்கு மணிதான்
மனிதர்கள் இருப்பதாக
தெரியவில்லை
காற்றுடன்
போராடிக் கொண்டிருக்கும்
மரங்களும்
குளிரும் மழையும்
நானும்தான்..
அயல் வீடுகளில்
இருள் குடிவந்திருக்கிறது
வாகனங்களுக்குக்கூட
இன்று ஓய்வுபோலும்
தொலைபேசி அடிக்கடி
சிணுங்கிக்கொண்டிருக்கிறது
எப்பவோ நான்
மறந்துபோன
காதலன் இன்றும்
அழைக்கிறான்
நண்பியின் சலிப்பான
வார்த்தைகள்
ஒலிப்பதிவு நாடாவில்
யாருடனும்
பேசவேண்டும்போல்
இல்லை
எதைப்பற்றியும் அறியவோ
சிந்திக்கவோ
ஆசையும் இல்லை

போர்வையின்
கணகணப்பான
அணைப்பிலிருந்து
உடல் அசைய மறுக்கிறது

பிரசுரிக்கப்பட்ட திகதி: 2007-12-09 00:00
Share with others