சுதந்திரம் ?
----------------

இருண்டு கிடக்கும்
குகைக்குள்
குருதியும்
ஓலமும்..

இறந்து கிடக்கும்
உடல்களுக்கும்
உரிமைகூற
எவரும் இல்லை

வீதிகளிலும் வீடுகளிலும்
மரங்களை அழித்து
மனங்களை அழித்து
நடப்பட்டுள்ளார்கள்
மனிதர்கள்
ஆயுதங்களுடன்..

திறந்தவெளிச் சிறைகளுக்குள்
பயத்தின் நிழல்
மனிதர்களைத்தின்ன
காணாமல்போபவர்களை
யார் தேடுவது

போருடன் தூங்கி
போரில் விழித்து
போரை சுவாசித்து
இறந்த உடல்களில்
தடுக்கிவிழுந்து
சாதாரண வாழ்வே
மறந்து
புதைகுழிக் கலாச்சாரத்தில்
மிதக்கும் எமது
தேசத்தில்..

சுதந்திரம் என்றோ
தற்கொலை செய்துவிட்டது

- றஞ்சினி

பிரசுரிக்கப்பட்ட திகதி: 2008-09-01 00:00
Share with others