டிசம்பர் 26ம் மரணமுமாய்...

ஓய்ந்த மழையும் - மௌனமாய் இரைமீட்ட திருப்தியில்
வெள்ளமுமாய் அடங்கிக்கிடந்தது
காற்றின் அசைவும் சலனமிட்ட ஓலையுமாய் தென்னை!
ஓலைக் குடிசைகள் ஓட்டை அடைக்கப்பட்டு
வாழ்தலின் சாயலை மெதுவாய் காட்டிக்கிடந்தன
பண்டிகைகயின் வருகை ஏனோ மரணத்தின்
அவலங்களை நிமிடமேனும் மறக்க வைக்கும்
சோகம் சுமக்கையிலேனும் வாழ்வில் சிறு மகிழ்ச்சி இனி வரும்
நாட்களேனும் வாழ்வு மலர்ந்திடும்
என்பதாய்

யாவும் பொய்த்தனவோ?
வாழ்வே பொய்த்தனவோ?
புதைகுளியா எம் தேசம்?
சேற்றில் புதைக்கப்பட்ட பனங்கிழங்காய் மானிடம்
மீண்டும் உயிர்ப்புறுமா?

எதைத்தான் உன்னிடம் கேட்டனர் இம்மக்கள்!
வலைவிரித்து உன்னிடம் தேசமா கேட்டார்!
ஒருவாய் உணவிற்காய் உன்னிடம் மண்டியிட்டு
மீன் பிடித்த இவர்களை ஏன் கொன்று நின்றாய்!
சொல்வதற்காய் மீண்டும் உன்வாய் திறத்தல் வேண்டாம்
கொடுப்பதற்கு எம்மிடம் ஏதுமில்லை!

மீண்டும் காற்றின் அசைவும் சலனமிட்ட ஓலையுமாய் தென்னை..
குடிசைகள்தானில்லை........

மாலியன்
27-12-04

பிரசுரிக்கப்பட்ட திகதி: 2005-01-01 00:00
Share with others