தாழ்திறவாய்
காயமே இது பொய்யடா காற்றடைத்த பையடா
என்கிறான் தாடியை புதராய் வளர்த்தவன்.
கொலைகொலையாய் விழுகிறது,
இதிலென்ன புதுவருடமும் மண்ணாங்கட்டியும்
என்கிறான் என் மறுநண்பன்.
நான் எனது நண்பர்களோடு
ஆடவைக்கும் இசைநடுவே
உட்கார்ந்திருக்கிறேன்.
விரல்கள் தொடும் ஒவ்வொரு கணமும்
எனது வைன் கிளாஸ் சூடாகிறது.
குழந்தைகள் ஆடிக் களிப்பித்தனர்
போதையில் என் நண்பர்களும் நானுமாக
இடையிடையே கோணலாட்டம் நடத்துகிறோம்.
பிறக்கும் புதுவருடத்துக்கான ஒரு கவிதையை
எழுதும் நினைப்பே அக்கணத்தில் எனக்கு வந்ததில்லை,
வலிந்து மறுத்தலின் மீதான கவனிப்புகளை
கவிதை கேட்படி நின்றதால்.
போர்ப்பறை விளாசுகிறது
மரணஒலிகள் காற்றின்மீது தாக்குதல் தொடுக்கிறது
சற்றுமுன் பேசிக்கொண்டிருந்தவன்(ள்)
பிணமாய்க் கிடக்கிறான்(ள்)
வாழ்வின்மீதான ஆசை அவர்களை அவசரப்படுத்துகிறது
ஓட்டம் நடை பதுங்கல் எல்லாமுமாக அவர்கள்
வாழ்வினை நேசித்தபடி விரைகின்றனர்,
அழிவுகள் கடந்தும்
உயிரின்மீதான நேசிப்போடும்.
எனது அறைகளில் இசையொலிகள் மோதி மோதி
எழுகின்றன.
நான் நண்பர்களுடன் நடனமாடுகிறேன்
நான் சந்தோசித்திருந்தேன்
நேரம் நடுநிசியை அண்மிக்கிறது
அப்போதும் நான் எனது புதுவருட கவிதையை
எழுதுவதாயில்லை.
போதையிலும் வாழ்வின்மீதான நேசிப்பை மறுத்துவிட
என்னால் முடியாமலிருந்தது.
மரணத்தின் மிரட்டலிலும்
வாளுருவி அலைந்துதிரியும் போரின் வெறியிடையும்
வாழத்துடித்தவர்களை எனது தத்துவம்
கோமாவரை அடித்துவிழுத்த
காத்திருந்த பொழுதில்... எனது கவிதை பிறந்தது,
மறுத்தலின் மீதான கவனிப்புகளோடு!
-ரவி (02012008)