2013.. இன்னமும் உறங்கியிருக்கவில்லை

01.
2013
--------------

இலையுதிர்கால ஓவியர்கள் தீட்டிச்சென்ற
ஓவியங்கள் உருவழிந்துபோன
வரலாற்றை பனிக்கால தேவதைகள்
நிலமெங்கும் மலையெங்கும்
ஏன் மரமெங்கும்கூட அவசரமாய்ச்
சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.
அவர்கள் திரும்பிப் போய்விடவேண்டும்.
நதியிடம் சொல்லி
அல்லது சொல்ல முயற்சித்து
மறைந்துபோகின்றனர் அவர்கள்.

எனது கடந்தகாலத்தின் சிதறல்களை
அதன் துகள்களைக்கூட இந்த நதியின்
இரைச்சல்களிடம் வீசியெறிகிறேன்.
அது திரண்டு திரண்டு அழிகிறது.
முகில்களின் மடியினில் கிறங்கிப்போன
நதியைப் பெயர்த்துவிட்டு
நான் புகுந்து, இப்போதான்
நாளிகையாகிப் போயிருக்கலாம்
அல்லது
பல மணி நேரமாகவும் இருந்திருக்கலாம்.
நான் இறகாகிப் போய்
பறவையொன்றை வெளியெங்கும்
மிதக்கவிட்டிந்தேன்.

பின்னொருநாள்
முகில் கோதியுதிர்த்த என்; துளிகளில்
நனைந்து சுகம் கண்டாள் என்னவள்
நதியிலும் விழுந்தன என் துளிகள்.
ஈரத்தின் குருத்துகளில் வழிந்த
நிறங்களையெல்லாம்
அவள் கூந்தலின் நுனிகள்
எதற்காக சேர்த்து வைக்கின்றன.

ஒருவேளை
உருவழிந்த நம்பிக்கைகளை
வழமைபோல் மீண்டும்
ஓவியமாய் அவள் வரைதல்கூடும்.
அதன் தொகுப்பை
2013 என பெயரிடவும் கூடும்.

02.
இன்னமும் உறங்கியிருக்கவில்லை
----------------------------------------

இருள்படர்ந்த கடற்பரப்பை நீவிவரும் காற்று
எனது குடிசையின்மீது இடறுகிறது.
இடையிடையே அது கிடுகை கூரையிலிருந்து
பெயர்த்துவிடுவது போலவும், பின்னர்
கிடுகு அமைதியடைவதாயும் இருந்த கணங்கள்
என்னை கடத்திவைத்திருந்தன.

கடந்துபோன காலங்களைப் போலன்றி,
காற்றையும் கிடுகையும் தவிர
என் மனம் வேறெதையும் வரைந்து கொள்ளவில்லை.
பயமற்று இருந்தேன்.
சமயத்தில் அதை ரசிக்கவும் செய்தேன்.

தோகையாய் விரியும் கடற்காற்றின் இரைச்சல்
காலம் என்னை கடைசியாக விட்டுச் சென்றிருந்த இடத்திலிருந்து
தரையிறக்கிவிட,
உடலுரசிய குளிர்காற்று என்னை நீவிவிட்டிருந்தது.
மீன்கள் பேசிக்கொள்வது கூட கேட்கிறது.

அரிக்கன்லாம்பின் வெளிச்சத்தை விடவும்
கிடுகு ஓட்டை செதுக்கி அனுப்பிக்கொண்டிருந்த நிலாத்துண்டு
சிறு உலகமாய் எனை வந்தடையவும்
அதை உள்ளங்கையில் இருத்தி வைத்து
அழகு பார்ப்பதுமாய், நான்
வியாபித்திருந்த பொழுதில்
கனவு ஒரு சிற்பமாய் வடிந்துகொண்டிருந்தது.
நான் இன்னமும் உறங்கியிருக்கவில்லை.

பிரசுரிக்கப்பட்ட திகதி: 2013-03-01 00:00
Share with others