தீயின் செந்நாக்கை நான்
தூசித்துத் துரத்திய நாட்களின் மீது
கடத்திவரப்பட்டேன்.
இருபத்தியிரண்டு ஆண்டுகள்
புத்தகங்களின் சாம்பலால்
தூசிப்படுத்தப்பட்டதாய் எம் அறிஞர்களும்
அலுக்காது சொல்லிக்கொண்டிருந்தனர்.
எரிபாடுகளின் குவியலில் எஞ்சிய
நூல்களும் களவாடப்பட்டிருந்தன.
யாழின்
நூல்நிலைய எரிசிதைவுகளை
தீ விட்டுச்சென்றது -
வரலாற்றின் பதிவுக்காய்.
அதுவும் இப்போ அழிக்கப்பட்டாயிற்று.
அதன் சுவடுகளை சுத்தப்படுத்தி மீண்டும்
எழுந்தது நூல்நிலையம் -பழசின் புதுசாய்.
வெள்ளைநிறப் பூச்சின் பின்னால்
பேதங்கள் மறைக்கப்பட்ட சங்கதியில்
ஒழுக்கு விழுந்தது.
விடுதலைத் தீயில் சாதிவெறி வதங்கியதான
ஒரு மாயைப் பொழுதில்
அவர்கள் வந்து காவலாளியிடம்
திறப்பைப் பறித்துச் சென்றனர்.
பிறகொருநாள்
பூட்டிய தனி அறைக்குள்
’சுமுகமாய்’
பேச்சுவார்த்தை நடத்தினர் -வாயில்
ஆயுதவெடில் நாற.
புதிய நு£லகத் திறப்பில்
சாதிக் கறல் படிந்தது.
நூலக வரலாற்றின் பதிவில்
செல்லன் கந்தையன் என்ற பெயர்
தீண்டத்தகாததாயிற்று.
எழுத்தறிவிப்போர் சாதியை எழுதி
அறிவைக் கற்பிக்க
ஊர்வலம் வந்தனர்.
’’நூலகத்தைத் திறவாதே!’’
இதைவிட வெட்கம் எதுவென நகைத்தது
முன்னவன் இட்ட தீ
மெழுகுதி£¤யையும் பெரும்தீ நகைத்தது -
யுத்த இரவுகளில்
படித்தலின் இறுதிமூச்சை நீ ஏந்தியதாய்
பெருமைப்பட்டதைப் பார் என்று.
தீமூட்டும் வேலை இனி
தேவையில்லை என்பதாய், அது தன்
கொள்ளியை எம்மிடமே
தந்துவிட்டுப் போயிருக்கிறது.
- ரவி (சுவிஸ்) 110503
குறிப்பு ::
செல்லன் கந்தையன் - தலித், 16.01.2002 இலிருந்து யாழ் மேயராகச் செயற்பட்டார்.
நன்றி: எக்ஸில்
தமிழினத்திற்க எதிரான முதலாவது அறிவுக்கொலையையும், சாதியத்தையும் பேசுகிறது உங்கள் கவிவரிகள். பாராட்டுக்கள்.