நின்னைத் துதித்தேன்
--சக்தி சக்திதாசன்

நின்னைத் துதித்தேன் - நின்
நினைவில் கலந்தேன்
என்னை மறந்தேன்
எழுத்தாய்ச் சுரந்தேன்

ஆயின நூற்றோடு ஒரு
அகவைகள் இருபத்திஜந்து
அவனியில் நீ பிறந்து
அன்னைத்தமிழின் மைந்தனாய்

தமிழைப் போற்றினாய்
தமிழாய் வீசினாய் - ஜயா
தமிழாய் மணந்தாய்
தமிழைச் சுமந்தாய்

கார் முகிலாய் நீயும்
கவிதை பொழிந்தாய்
கவிதை செய்தே பார்கவி
கர்ஜனை புரிந்தாய்

சுதந்திரக் காற்றாய்
சுந்தரத் தமிழில்
சொரிந்த கவிதைகள்
சிலுப்பின உணர்வினை

கனவாய் நீ கண்ட
கற்பனைச் சுதந்திரம்
நினைவாய் ஆனதொரு
நிகழ்வாய் நீயானாய்

ஆணுக்குப் பெண் உலகில்
அடிமையில்லை என்னும்
அழியாத உண்மையை
அடித்துச் சொன்னவனே

பிறப்பால் வந்ததல்ல
பிழைதான் ஜாதிபேதமென
பகன்றாய் துணிவுடனே
பழித்தார் பித்தனென உன்னை

என்னருமைப் பாரதியே
என்னெஞ்சின் ஒளி நீயே
என்றென்றும் அகிலத்திலே
எரியும் ஞானச்சுவாலை நீயே

பிறந்த தினம் உனக்கு
மறந்ததில்லை உனை ஒரு கணமும்
திறந்த இதயத்தோடு உனை
தியானிக்கிறேன் எந்தையே

வணக்கத்துடன்
சக்தி

பிரசுரிக்கப்பட்ட திகதி: 2007-12-16 00:00
Share with others