வெறும் மனிதன் தான்.. அங்கதன் வரும் வரை

01.
வெறும் மனிதன் தான்..
----------------------------

ஏதோ வடிக்கின்றேன்
கவிஞனல்ல நான்
எதையோ தேடுகிறேன்
அறிஞனல்ல நான்

மனிதனாக நடந்து விட
மனம் கொஞ்சம் துடித்தெழும்ப
மூலைகளில் இருளுக்குள்
முடங்கிக் கிடக்கும் மாண்புகளை
தூசு தட்டி எடுத்து
தோளிடத் துடிக்கின்றேன்

இலக்கியமும் தெரியவில்லை
இலக்கணமும் புரியவில்லை
உள்ளத்தின் உணர்வுகளை
வடித்துவிட அன்னைமொழி
வார்த்தைகளைக் கோர்க்கின்றேன்

அன்று கண்ட நிலவுக்கும்
இன்று காணும் நிலவுக்கும்
இல்லை ஒரு வேறுபாடு
பார்க்கும் எந்தன் விழிகளில்
பூக்கும் அந்தக் காட்சிகள்
புரியவைக்கும் அர்த்தங்கள்
புதுமலராய் பூக்குதம்மா .....

பூமியது உருள உருள
கூடியது அகவைகள் மட்டுமே
நெஞ்சிலின்று மலரும் எண்ணங்கள்
நேற்றை போல் இல்லை
கண்டதெல்லாம் வேண்டும்
உள்ளம், காண்பதெல்லாம்
அடையும் ஆசை
அற்றுப் போகும் சூழலில் இன்று
அதனால்தான்
வெற்றுக் காகிதத்தில்
கொட்டுகின்ற வார்த்தைகள்
கட்டுகின்றன அர்த்தங்கள்
கனக்கின்ற மாற்றங்கள்

ஆமாம் ......
கவிஞனல்ல நான்
வெறும் மனிதன் தான் . . .

02.
அங்கதன் வரும் வரை .....
-------------------------------

அங்கதன் வரும் வரை
அர்த்தமில்லா ஆட்டங்களை
அந்தரத்தில் ஆடுகின்ற
அவசர வாழ்க்கை இது

அங்கொன்றும் இங்கொன்றும்
ஆசைகளின் விளிம்புகளில்
அடையமுடியாக் கனவுகளில்
அலைகின்ற கோலமிது

ஆடும்வரை ஆட்டம்
ஆடியதும் ஓட்டம் அவ்
ஆட்டத்தின் விட்டம்
அறிவதுதான் சித்தம்

அகிலத்தின் இயக்கம்
அறிந்து கொள்ளா விளக்கம்
அடங்காத தாகம் அதையும்
அடக்கி விட்டால் விவேகம்

அறிஞர்கள் ஒருபுறம்
அள்ளித்தரும் அருள் வரம்
அடர்த்தியான வனத்தினுள்
அலைகின்ற விடலை யான்

பிரசுரிக்கப்பட்ட திகதி: 2010-05-26 00:00
Share with others