வார்த்தைகளுள் தமது
கவலைகளை புகுத்தி
தனக்களவாய்
முடிந்தால் கனதியாய்
ஊதிப்பெருப்பிக்கும் கலையறியா
குழந்தைகளின்
போர்ச்சோகம் கொடியது.

பனிக்காலம்
கொண்டுபோயிற்று அதன் பசுமையை
மழலை இழந்த சோகத்தில்
வாடும் ஓர் தாய்போல்
இந்த மரமும் ஏதும் இழந்ததுவோ
அன்றி
சூரிய முகட்டுக்கு தன் பசுமையை
அனுப்பிவைத்து - அதன்
வரவுக்காய் காத்திருக்கிறதுவோ
அறியேன் நான்.

பனிப்போரில் இழந்த தன்
பசுமையை எண்ணி
சோகம் கொள்கிறது இந்த மரம்
என்று நான்
எடுத்துக் கொள்கிறேன்.

சிறகொடுக்கி தனியாக
கொடுங்குகிறது ஓர் குருவி
போர்பட்ட குழந்தையொன்றின்
புரியாத சோகங்களும் ஏக்கங்களும்
இந்தக் குருவியின் இறக்கையுள்
புகுந்ததோ என்னவோ
அது கொப்புதறி பறப்பதாயில்லை.

சூரிய ஒளி
பனிப் புகாரினூடு வடிந்திருக்கும் இந்த
மங்கிய பொழுதில்
ஈரம்பட்டு காட்சிகள் கலைகிறது -
பார்வைகளை முறித்தபடி.
அவரவர் பார்வையில்
சமாதானக் கனவு
விதம்கொள்கின்றது.

குழந்தையின் உலகையே
அங்கீகா¤க்காத அதிகாரப் பிறவி நீ
அதன் உளம்புகுந்து சோகம் அறிய
முடியுமா உன்னால்
என்கிறது வேகமுறும் காற்று
பனித்திரளை துகளாக்கி
வீசியடிக்கிறது
குளிர்கொண்டு அறைகிறது என்
முகம் சிவக்க.

போரின் இறப்பை
கொத்திவரும் ஓர் செய்திக்காய்
இந்தக் குருவியும் காத்திருக்கிறது!

-
(010302)

பிரசுரிக்கப்பட்ட திகதி: 1998-01-01 00:00
Share with others