நீர்த்திவலையால்
மேகத்தை அழைத்து
வானத்தை தன்
மடியில் வீழ்த்தியிருந்தது
அந்த அருவி

வானம் கிறங்கிக் கிடந்தது
அருவியின் அணைப்பில்.

மரங்களின் பச்சையம்
வழிந்து
கரை ஊறிக்கிடந்தது.

நுரைதிரள் பொங்கு பேரிசை
நடுவே
குன்றின்மீது நாம் நின்றோம்.

நகரம் மறந்துபோயிற்று
தெருக்களும் மறந்துபோயிற்று
அருவிக் காற்றுள்
இயற்கைப்பட்டு நாம்
நின்றோம் - இயந்திர வாழ்வின்
இரைச்சல் உட்புகாதபடி.

வானவில்லும் நீரிறங்கிய
அதிசயப் பொழுது!
நிறம் கரைத்து
அள்ளித் தெளித்தன
நீர்த்துளி சிதறல்கள்- காற்றில்
கரைந்தபடி.

றைன் நதி நீள்வில் ஒரு
புள்ளியாய்
உயிரிசை எழுப்பியது
அந்த அருவி.

இரைச்சல்
நீரிரைச்சல்-
நரம்புகள் சிலிர்க்க மறுத்தால் நீ
மரத்துப்போன பிறவி
என்பதுபோல்.

என்
கோடி நரம்புகளும்
ஊரத் தொடங்கின.
இயற்கையின் உலகில
கணப்பொழுதேனும்
வாழத்துடித்த என் இதயம்
படபடப்பில்
சிறகை அடித்து
பறக்க மறுத்தது.

குன்றின் உச்சியில்
உயிர்த்து நின்றோம்.
நகரத் தயங்கினாள் என்
நண்பி.
சிட்டுக் குருவியின் விடுப்பாய்
துருதுருத்தாள் என்
மகள்.

விடைபெற இயலா
தயக்கம் தோய்ந்து
குன்றின் வழியால்
வழிந்து வந்தோம்.

குன்று அடிவாரம்!
இப்போதும் அந்த ஒற்றை மீன்
துள்ளிப் பாய்வதும்
வீழ்வதுமாய்
போராடியது.

நாம்
படகில் ஏறினோம் - மீண்டும்
இயந்திர வாழ்வின்
ஒற்றைத் தீவுக்கு!

பிரசுரிக்கப்பட்ட திகதி: 1998-01-01 00:00
Share with others