பலஸ்தீனத்தைக் குதறுகிறது
ஏவல் நாயொன்று
றமெல்லாவின் இடிபாடுகளுள் அது
மோந்து திரிகிறது -தன் சொல்ப்
'பயங்கரவாதிகளை’.
காட்சிகளில் லயித்துப்போய்
அமர்ந்திருக்கிறான் அதன்
எஜமானன்.
புல்டோசர்கள் கட்டடங்களை
நிதானமாகத் தகர்க்கின்றன
இடிபாடுகளை நிர்மாணிக்கின்றன
வெளியே வருகின்ற எஜமானன்
ஜனநாயக முகமூடி அணிகின்றான்
காட்டமான குரலில்
மனிதம் பற்றிப் பேசுகிறான்
பேரழிவின் ஆற்றலுடன் ஈராக்
பயமுறுத்தி நிற்கிறது
மனித நாகரிகத்தை என்கின்றான்
போர்ப் பிசாசுக்கு
உடை அணிவிக்கப்படுகின்றது
பேரழிவை நடத்தும் ஏவல்நாயின்
வெறியாட்டம்
முற்றுகை, தனிமைப்படுத்தல்,
தற்காப்பு என்றெல்லாம்
சொல்கொண்டு அதனதன்
அர்த்தங்கள் களையப்படுகின்றன
முக்காடு போட்ட அந்தத் தாய் தன்
மகனுக்காகக் கதறுகிறாள்
இரத்தம் தோய்ந்த உடல்களை
காவியபடி
பலஸ்தீன வீதிகளை மொய்த்த மக்கள்
விரைகின்றனர்
மனிதக் குண்டாய் சிதறிப் போனவனின்
பிஞ்சு மகன்
மரணத்துக்குப் பயமில்லை என்கிறான்.
எனக்குள் இறங்குகிறது
காட்சிகள்
மனித நாகரிகம் இப்படியாயிற்று
ஜீரணித்துக் கிடக்கிறதா
மனித இனம்?
கேள்வி என்னைத் துளைக்கிறது
பல இலட்சம் யூதர்களின்
உடலம் சிதைத்த கிற்லரை
இப்போ ஜீரணித்துவிடுவேனோ நான்!
அச்சம் என்னைத் துன்புறுத்தி
எழுகிறது
இன்றைய
ஏவல் நாயின் வேட்டையில்
மனிதத்தைக் குதறிய
அன்றைய ஓநாயின்
இரத்தவாடை வீசுகிறது.