ஓரு கோடையின் கடைசிக்காலம்
1
குதர்க்கமாய் குத்திட்டு நின்றன
சைபீரியன் பறவைகள்
ஓடும் Ridaeau வுக்கெதிரே!
ஆற்றின் வேகம் எவ்வளவு நாள்தான்
நீடிக்குமோ தெரியாது,
Winter வரப்போகும் சிலமன் கொஞ்சம்
கொஞ்சமாய் தெரிகிறது!
மரங்களும் இலையுதிர்த்தலுக்காய் வண்ணம்
பூசவும் தொடங்கிவிட்டன.
தெருவழி மனிதரும் சற்றே தரித்து ஆற்றை -
அழகை ரசித்தலில்
கோடையை விடைகொடுத்தல் கூடும்
2
பிரிதலும் சேர்தலும் பிரிந்தே போதலுமாய்
புலம்பெயர் வாழ்வு!
நேற்று நிஐங்களாய் இருந்த உறவுகளும்
தொலைந்தே போகும் தூரே -
தேடுதல் சாத்தியமில்லை
இருத்தலுக்காய் இயந்திரமாகாவிடின்
அன்னியமாகி தொலைந்தேவிடுவோம்
3
மீண்டும் சைபீரியன் பறவைகள்
நெஞ்சை நிமிர்த்தி
நீரினுள் பாய்ந்தன! ஏதிர்த்து முன்னே நீந்தின
மூச்சை அடக்கி உணவைத் தேடின
அதில் ஒன்று சற்றே நிமிர்ந்து ஏளனமாய் -
ஏ மனிதா நாடு துறத்தலும் நாடு இழத்தலும்
எமக்குமொன்றும் புதிதில்லை - ஆயினும்
வாழ்வின் இழப்புகளுக்கிடையிலும்
வாழ்தலில் குறியாய் உள்ளோம்
மீண்டும் மீண்டும் எம்மை Winter கள்
துரத்தல் கூடும்
ஆயினும் சிறகுகள் இன்னும் இருக்கின்றது!
4
மௌனியாய் மேற்கே சூரியன் மெல்ல கரைதலில் காற்று குளிரைக் காதில் உரைக்கும் -
மெல்ல எழுகையில்
வாழ்வின் சூட்சுமம் உரைத்த
பறவை எங்கோ மறைந்திருந்தது.
மாலியன்
1-10-2002
குறிப்பு:
Ridaeau - Ottawa, Canada வில் உள்ள ஆறு