- சகாரா
கண்களைக் குருடாக்கும் பெருமை
வெற்றியை விலைபேசும் பொறாமை
இருப்பைத் தின்னும் சோர்வு
அடிக்கடி குழம்பித் தடுமாறும் பலவீனம்
புன்னகையை மறைத்தழிக்கும் பொய்ப்புழுதி
மகிழ்ச்சியைக் கொத்தத் துடிக்கும் துரோகம்
நேர்மையை நோகடிக்கும் குரூரம்
நட்பைத் தூரவிரட்டும் மௌனம்
எதிரியையும் நெகிழ வைக்கும் துயரம்
துயரங்களைத் தித்திக்கவைக்கும் விரக்தி
விரக்தியைத் துளித்துளியாய்க்
கரைய வைக்கும் கவிதை
சூன்யத்தில் கயிறுதிரிக்கும் குடும்பம்
சுயத்தைச் சாகடிக்கும் உலகம்
தன்னம்பிக்கையின் மறுபரிசீலனையில்
தள்ளிப் போடப்படும் மரணம்
எல்லாம் உறிஞ்சித் தீர்த்தபின்னும்
எப்படியோ மிச்சமிருக்கிறது
இன்னும் கொஞ்ச வாழ்க்கை.
நன்றி ::
”-நதிக்கரையில் தொலைந்த மணல்”
வெளியீடு : பயணம் புதிது
புலியூர் 639 114
கரூர் வட்டம்
தொலைபேசி :: 04324 - 50292
பிரசுரிக்கப்பட்ட திகதி: 1998-01-01 00:00