கூதலும் கூடிய குளிர் காலம்
தேயிலைச் செடிகளின் மேல்
நீர்த் துளிகள் என்னை
கற்பனை உலகிற்கு இழுத்துச் சென்று
கன்னா பின்னா எனக் கவிதைகள்
பலவும் எழுத வைக்கும்
முகிலிடையின் மேலே
மலைத்தொடரின் உச்சியில்
சரிந்து கிடக்கும் லயக் கதவுகள்
அதன் ஊடே...
தாயின் வரவை எதிர்நோக்கி நிற்கும்
பிஞ்சு முகங்கள்...
பார்ப்போர் விழிகளில்
நீரை வழியச் செய்யும்
விறைத்துப் போன கரங்களால்
துளிர்களைக் கொய்து
விதியினை நொந்து
வேதனையில் தோய்ந்த தாயுள்ளங்கள்
ஒரு வாய் ரொட்டிக்காய் - தம்முயிரைப்
பணயம் வைத்து மலைச்சரிவில்
தடம் பார்த்து நடப்பதுவும்
நடைமுறையில்... நம்
கண்ணோட்டத்துக்கு அப்பால்
ஒளிந்திருக்கும் அவர்கள் வாழ்க்கை
இது ஒன்றும் மலையகப் பெண்களுக்கு
புதிதல்லவே

பிரசுரிக்கப்பட்ட திகதி: 1998-01-01 00:00
Share with others