அன்றலர்ந்த தோட்டத்துப் பூவின் மணம்
விடியற்காலை காவிரி ஆற்றின் குளிர் சிலிர்ப்பு
முற்கால சோழ காற்றூளிகளின் விசாலம்
மோனத்தில் தவித்திடும் கருங்குயிலின் கவிதை
கனவுகளை விரித்திடும் வயல்வெளி விண்மீன்கள் எனக்கு

இசைவட்டில் தாலாட்டும் ”வெஸ்ட் லைப்”
வேக ரயில் பயணத்தில் சாய்ந்து கொள்ள அம்மாவின் தோள்
திவலைகள் படர்ந்த குளிர் கதவில் பிம்பம்
பூச்சாடிகளில் துலிப் மலர்களின் புன்னகை
துல்லிய நீலப் படுகைகளில் பவழப் பாறைகள் உனக்கு
சினேகத்தை உணர்ந்துகொள்ள
மெல்ல இறுகிக் கொள் உனக்குள் என்னை
மொழிகளின் சிடுக்குகளிலிருந்து விடுபட்டு
குறியீடுகள் உருகி விலகும்
ஆனந்த மௌனத்தில்
ஆழ்ந்து கரைந்து உயிர்ப்புருவோம்

¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨

பனிசிகரத்தின் ஆழ்குகையிலிருந்து
வசீகரத்தின் மர்ம அழைப்பென
கானக குரலொன்று நகர்ந்து வருகிறது
மெல்லிய காற்றின் சுகந்தத்தில்
கால்கள் பொடிந்து மணலாகி
திசைகளின் வெளிகள்
கரைந்து கொண்டிருக்கின்றன
தருணமில்லை
விடுபட்டுப் பறக்க வேண்டும்
அவநம்பிக்கை தொனிக்கும்
உந்தன் விழிகளில் கவிழ்ந்திருக்க விருப்பமில்லை
உன் காருண்யத்தால் மட்டுமே
விரியக் காத்திருக்கும்
வனங்களை மலரச்செய்ய
வாய்க்கும் தருணத்தில்
பொன்னொளிரும்
சிகரத்தின் அழைப்பால்
தழைப்பாய் நீயும் ஓர் நாள்.

பிரசுரிக்கப்பட்ட திகதி: 1998-01-01 00:00
Share with others