மெல்லத்தட்டு

சத்தி சக்திதாசன்

என்னிதயக் கதவுகளை மெல்லத்தட்டு
ஓசையைக் கேட்கும் பலம்
ஏனொ இதயச் சுவர்களின்
கற்களுக்கு இல்லை

உன் கேள்வி நன்றாகவே
எனக்குப் புரிகிறது
கைகோர்த்து நடந்து
பழக்கமற்றவன் வாழ்க்கையெல்லாம்
எப்படி தோழனாவாய் என்று
சின்னப்பெண்ணே மெல்லத்தட்டு

உன் கழுத்தில் நாணேற்றி
நானுனக்கு கணவனாய் பதவியேற
சந்தர்ப்பம் தா , அங்கே நான் நிகழ்விக்கும்
சம்பவங்கள் என்னை உன்
தோழனாக்கும்

பலர் தட்டிய போதும் திறக்காத
என்னிதயம்
தட்டவென நீ கைகளை உயர்த்தியபோதே
திறந்து கொண்டதே
இதுதான் பூர்வஜென்மப்
பலனென்பரோ
பூங்காற்றே நான் மலரிதழ்
மெல்லத்தட்டு இல்லையேல்
உதிர்ந்து விடுவேன்

தேன்வண்டே மெதுவாக
சிறகை விரி
அதன் சலசலப்பில் என்
சப்த நாடியும்
ஒடுங்கிவிடும்

பொன்வண்டு வளர்க்கும் ஆசை உனக்கு
பறக்கும் என்மனதைப் பிடித்து
உன்னிதயக் கூட்டில்
அடைத்து விட்டாய்
பருவ மழையே நனைந்தால்
ஜீரமேறி நலிந்துவிடுவேன்
மெல்லத்தட்டு

உள்ளத்தை
உன்வீட்டு முற்றத்தில்
தொலைத்து விட்டேன்
உன் மனமெனும் பற்றைக்குள்
விழுந்ததுவோ

காதலை எனக்கு
கல்லூரியின்றிக்
கற்பித்தவளே
காலமெல்லாம் நான் என்
காதோடு ஒரு கவிதை சொல்லி எனைக்
கைதாக்கி உனதாக்கி எனைத்தாக்கியது போதும்
இனி வரும் வேளையிலே
உன் பூமுகத்தின் மென்மைப்போல்
என் இதயக் கதவுகளை
மெல்லத்தட்டு மேகம் விலகும்

பிரசுரிக்கப்பட்ட திகதி: 2005-02-11 00:00
Share with others