உன்னைப்பார்க்கும் உலகம்
சத்தி சக்திதாசன்
அது ஒடுவதால்
மனிதர் ஓடுகிறார்
அது நின்றுவிட்டால்
உலகம் ஸ்தம்பித்துவிடும்
கடிகாரத்தைச் சுற்றிக் காற்றாய்
கலைந்தோடும் மனிதனைப் பார்த்து
கருத்தான புன்சிரிப்பைக்
கக்குதே அந்தக்
கடிகாரம்
பளபளக்கும் காரில் பெருமையுடன்
பவனி வரும் வியாபாரி
பணம் குவிப்பான் மணிக்கணக்கில்
பாவம் புரியாமல் கையில்
பகட்டாய் அணிந்திருக்கும் கடியாரம்
தங்கத்திலான ஒன்று அடுத்து
தகரத்திலான ஒன்று
தவறாமல் புரிந்திடுவீர்
தாமதம் இன்றி அவைகாட்டும் மணி
தரணியிலே ஒன்றன்றோ !
மணி பார்த்து தன் பசிபோக்கும் மனிதன்
மறந்தானே தனக்கும் ஓர் மணிதான்
மற்றவர்க்கும் ஓர் மணிதானென்று
உலகைப் பார்த்துச் சிரிக்கும்
உயர்ந்த கடிகாரம்
உண்மையை ஏன் இவர்
உணர்ந்து கொள்ள மறுக்கின்றார் ?
உருள என் முள்ளு மறந்து விட்டால்
உண்ண உணவேது இவர்களுக்கு !
ஆயிரம் பேதம் கொள்வர் அவரே
அடுத்தவரை மறந்திடுவார்
அன்பெனப் பிதற்றிக் கொள்வர்
அறிவையே இழந்திடுவார்
பெரிய முள்ளை பார்த்து
சிறிய முள்ளுக் கூறியது
நீயும் நின்றுவிடு நானும்
நிறுத்தி விடுகிறேன்
உள்ளத்தை இழந்த உலகம் இனி
எம்மைத் தேடி ஏங்கட்டும்
உண்மையாய் தம்மை அறிந்தபின்
உலகம் இனி இயங்கட்டும்
ஆண்டவன் சிரித்தான் !
கடிகாரத்தின்னுள்ளே ஒரு
காலத்தால் மாறாத தத்துவம்
பெரியதும் சிறியதும் ஓன்றாக
உழைத்தால் தான் உலகம் விடியும்
கைகளில் இதைக் கட்டிக்கொண்டே
கருத்தழிந்த இவர் தமக்கு
கடிகாரம் தனும் உண்மைதனை
உணர்த்தட்டும்.
உலகம் உன்னைப் பார்க்கும் !