தத்தித்திரிந்த பருவம் போதுமினி
உனக்காக படைக்கப்பட்ட பிரபஞ்சத்தில்
கால் தடம் பதித்து மெதுவாய் நடைபழகு
நேற்றுவரை நீ ஒரு ஏமாளி
சுய சிந்தனை அற்ற முட்டாள்
மனித வாழ்க்கையை அலட்சியம் செய்த
ஓரு ஞானி
எதுவாக நீ இருந்திருந்தாலும் பறவாயில்லை
வேகமாய் விடிந்து கொண்டிருக்கும் இந்த
விஞ்ஞான உலகத்திற்கு ஒப்பாய் நீயும்
ஒரு வெளிச்சத்தைக் கொண்டுவா!
பிறந்தோம்
வாழ்க்கையை நன்றாய் ருசித்து
வாலிபப் பருவத்தை ஓட்டி முடித்தோம்
துணையொன்று தேடி இனிதாய்
இல்லறம் நடத்தினோம்
குடும்பத்தை விஸ்தரித்தோம்
குறையேதும் இல்லாத நிறைவான வாழ்வு
என மிகவும் பெருமையாய்ப் பேசி
மரணித்தவர்களைப் பார்..
கடைசியில் என்ன?
மண்ணோடு மண்ணாய்
உளுத்துப் போய்விட்டார்கள்
பறவாயில்லை
மாண்டபின்னாவது இவர்கள் மண்ணேடு நல்ல
உரமாய்ப் போனார்கள் - ஆனால் நீ
மாண்ட பின்பும் பிரயோஐனமற்றுப் போவாய்
நவீன முறையில் மின்சாரம் பாய்ச்சியல்லோ
உன் வெற்றுடலை அழித்துவிடுவார்கள்
ஒரு பிடி சாம்பலாய்
பின்பு நீ..
மண்ணுக்கும் உதவாய்
அதனால் தான் சொல்கிறேன்
குறுகிய வட்டத்தில் தத்தி நடந்தது போதும்
விடிந்துகொண்டிருக்கும் இவ்வுலகிற்குள்
உன் பங்கு தொடர மெல்ல நடந்து வா
உன்னால் முடிந்ததொன்றை அழகாய்
இந்த பூமிக்காய் சித்தரித்துவிடு
அது போதும்.
பரந்த நோக்கோடு வாழத்தொடங்குவாய் எதையாவது சாதித்துக் கொள்வாய் என தத்துவம் போதிக்கும் நல்ல கவிதை.
அன்புடன்அகணி