இருப்பு
சிறு தொட்டி
சுவர் நான்கும் கண்ணாடி
நஞ்சு நீக்கி வடிகட்டி நிரப்பிய நீர்
நீரிடை மிதக்கும் செயர்க்கைத் தாவரங்கள்
மட்டுப்படுத்தப்பட்ட மின் வெளிச்சம்
மின் சூடாக்கியின் கணகணப்பு
பதனிட்டு தயார்செய்யப்பட்ட உணவு
நேரம்தவறாத உபசரிப்பு
சொகுசு சிறைக்குள்ளிருந்து
தன் வாழ்வின் துயரைப் பாடுகிறது
மீன்குஞ்சு
பின்பனிக்காலம் 2001.
பனியில் கூத்து
மயான வெளி
பனி விரித்த பாயில்
துயில்கிறது
பௌர்ணமி நாளின் முன்னிரவு
மயானத்தின் பின்புறம்
கீழ் வானத் தொடுவிழும்பில்
கடல் கொணர்ந்து எறிந்துவிட்டுப் போன
பிணம்
உடல் உப்பிப் பருத்து
எற்றுண்டு கிடக்கிறது
நிலவென்ற பெயரில்
நிலாப்பிணத்திருந்து
சதை அழுகி வழியத் தொடங்குகிறது
நல்ல பால் போல
ஊன்
கண்களை மூடித் திறக்கிறேன்
இலை சொரிந்து நிமிர்ந்த மரங்கள்
எலும்புக்கூடுகளாக
பிணத்தின் மீது கெலியுற்று
கைகளை உயர்த்தி அசைத்து
அங்கலாய்த்து
பிணத்தின் ஊனை அழைந்து
அள்ளிப் பருகப்பருக
உச்சம் கொள்கிறது போதை
காற்று மெல்லெழுந்து
குழலெடுத்தொலிக்கிறது
தொடங்கிற்று
எலும்புக்கூடுகளின் கூத்து
ஊழியோவென ஐயுறு வண்ணம்
உக்கிர தாண்டவம்
அன்று மின்கம்பத்தில்
உயிரைப் பறிகொடுத்தது பறித்தது
இரண்டும் கட்டிப்பிடித்து களிகொண்டாடுகிறது
வல்லுறவில் மாண்டது வல்லுறவு
செய்தவன் கன்னத்தில் மாறிமாறி முத்தமிடுகிறது
கூத்தின் உச்சத்தில்
போதையேறிய
சின்னஞ் சிறிய பாலன் கூடுகள்
அறியாப் பருவத்தில் வீழத்தப்பட்டோமெனக்
கண்ணீர் வடிக்கின்றது
வெள்ளி முழைக்க மெல்ல இறங்குகிறது
பனித்திரை
காலையிலே
வானத்தின் மறுபுறத்து மூலையிலே
எலும்புக் கூடாய் கிடக்கிறது
நிலவு
முன்பனிக் காலம்-2001
போர்க்காலக் கனவு
அச்சமும் துயரும் விரவிப் படர்ந்த
நீண்ட இரவுகள்
இரவெல்லாம் கனவு
கனவில் இராஜ நகரியின்
நெடுமுடிக் கோபுரமிரண்டும் நொருங்கிப் பொடிபட
நீறு கவிந்த சிதை நடு நின்று
விரிசடை சிலுப்பி
நெடுந்தாள் பரப்பி
போர்த்தினவெடுத்த அரசனின் சன்னதம்
வரன் யார்? எவன் அசுரன்?
என்பதறியா முப்பத்து முந்நு}றுகோடி தேவரும்
பூதகணங்களும் நடுங்க
உச்சங் கொள்கிறது
உருத்திரனின் ரௌத்ரத் தாண்டவம்
நெற்றிக்கண்ணிருந்து நிரவித் ததும்பும்
எரிமலைக் குளம்பு
தீயின் நாவும்
சதை பொசுங்க எழும் நாற்றமும் வீசும் இடிபாடுகளிடையே
குருதி வழியத் தனித்திருக்கிறேன்
வானை நிறைத்து மொய்க்கிறது
ராஜாளிப் பறவைகள்
சவக்களை படிந்த முகத்துடன்
தன் சவக்குழியை தோண்டுகிறான்
அந்திச் சூரியன்
தொலைவிலிருந்து சிறுகீற்றாய் தொடங்கி
வியாபித்து
மிகநெருங்கி விரிகிறது
சுடலைக் குருவியின் துயரப்பாடல்
அத்துயரில் இணைகிறது
எனது குரல்
இலையுர்காலம் 2001