காலை

நான் விழித்தெழும் போதில்
வெய்யில் இல்லை

மீசையை மழித்து
நிலவு வேடம் பூண்டிருந்தது
சூரியன்

தலைமாட்டிலிருந்து
மதியம் ஒரு மணி என
மனனஞ் செய்த வாக்கியத்தை
வலு வீறாப்பாய் ஒப்புவிக்கிறது
கடிகாரம்

இருபத்துநான்கு மணியும் கண்வளராப்
பெருநகரில்
இடறி வீழ்ந்து
முளைவிட்ட அகதிப்பயல் நான்
இரவையும் பகலையும்
எப்படித் தரங்குறிப்பது

இப்போதென் இணை
தொழிற்சாலைத் தையல் இயந்திரத்துடன்
மாரடித்து கொண்டிருப்பாள்
அவளுக்கு
இது மதியந்தாண்டிப் பிற்பகல்

எனக்கு
நான் விழித்தெழும் பொழுதே
அஃதே காலை
என பங்கிற்கு ஓடிச் சோர்ந்து வீழ்கையில்
அஃதே இரவு

நன்றி: 'அஃதே இரவு அஃதே பகல்' கவிதைத் தொகுப்பிலிருந்து...

பிரசுரிக்கப்பட்ட திகதி: 1998-01-01 00:00
Share with others