அன்பின் சக்தி
------------------------

சமையலறையில் நீ
அருகிருந்து உதவவேண்டாம்.
‘உதவவா?’ என்ற
ஒரு வார்த்தையே போதும்
உன்னை அமரவைத்து
ஊட்டிவிடுவேன்.

வீட்டைத் தூய்மை செய்ய
நீ வந்து துடைக்க வேண்டாம்
நாற்காலியில் சாய்ந்து கொண்டு
ஜாலியாகப் பார்த்துக்கொண்டிருக்கும்
தொல்லைக்காட்சியை
கொஞ்சம் நிறுத்திவிட்டு
ஒதுங்கி இடம் கொடுத்தாலே போதும்
மனதில் உன்னைத்
திட்டுவதற்காகக்
கொட்டிக்கிடக்கும்
வார்த்தைகளோடு சேர்த்துத்
துடைத்தெடுப்பேன்.

‘அசுத்தமாக இருக்கும்
குளியலறையை
சுத்தம் செய்தால் என்ன?’
என்று கேட்பதை விடுத்து
குளிக்கும் முன்
‘நான் சுத்தம் செய்கிறேனே’
என்று சொன்னாலே போதும்
உன் முகத்தில்
என் முகம் பார்க்கும்
மாயக்கண்ணாடியைப் போல
நானே அதை மாற்றிடுவேன்.

அதிகாரத்தை விட அன்பு
எத்தனை சக்தி வாய்ந்த்து.

பிரசுரிக்கப்பட்ட திகதி: 2014-10-04 00:00
Share with others