துயரங்களின் பின்னான நாட்களில்...

உலகின் அதிஅழகு
சமாதானம் என
படுகிறது எனக்கு.
அதனால்தானோ என்னவோ
அவ்வளவு இலகுவாய் அது
கிட்டுவதில்லை.
எனவே நான்
சமாதானத்தை சந்தேகிக்கிறேன்

வாழ்வின் ஒவ்வொரு இழைகளும்
சிலந்திவலையாய்ப் பின்னப்பட்டபின்
இன்னொரு புயலை நினைக்க
உடல் நடுங்குகிறது.
மண்ணைப் பெயர்த்துத்
திரிந்த துயரங்களின் பின்னான
ஓய்ச்சலின் நடுவே
எதிரியுடனான கைகுலுக்கலில்
ஆழம்கொள்கிறது சந்தோசம்.
ஆனாலும்
இந்த விரல்களினு£டு பகிரப்படுவது
அதிகாரம் மட்டும்தான் என்றால்
சந்தேகம் கொள்வதிலிருந்து என்னால்
தப்பிக்க முடியவில்லை.

நடுநிசியில் விளக்குவைத்த
வெளிச்சத்தில் ஓர் உருவத்தைச்
சுற்றிச் சுற்றி குரைக்கிறது எனது
வீட்டு நாய்
இன்னும் நெருங்குவதாயில்லை

புயல்பூத்த மையங்களைத்
தொடும் அதிர்வுகளின் பின்னால்
வெடிக்கப்போவது போரா
தலைநிமிரும் சமாதானமா என்பதாய்க்
காத்திருப்பதைத் தவிர நான்
கொள்ள எதுவுமில்லை -
இப்போதைக்கு!

- ரவி (சுவிஸ்,நவம்பர்2002)

பிரசுரிக்கப்பட்ட திகதி: 2004-11-07 00:00
Share with others