மாறிடுமா.. அலையாய்…ஒத்துக்குமா..
01.
மாறிடுமா…
----------------
மரணம் ஒரு சம்பவம்தான்
மனித வாழ்வினில்,
அது
மாற்றான் வீட்டிலென்றால்
சாதாரணம்,
தன் வீட்டிலென்றால்
தவிக்கிறானே மனிதன்
தனியே கிடந்து…!
மாறிடுமா இந்த வேறுபாடு..,
மாறினால் அவன்
ஏறிடுவான் வாழ்வில்
ஞானியாக…!
02.
அலையாய்…
--------------------
சலிப்படைவதில்லை
சமுத்திர அலைகள்,
வந்து வந்து அவை
செல்கின்றன
வருடமெல்லாம் …!
சலிப்படைந்து சலிப்படைந்து
சாவை
சமீபத்தில் கொண்டுவருகிறாயே..
சகோதரனே நீ
சங்கடப்படாதே,
வாழ்க்கை வாழ்வதற்கே…!
03.
ஒத்துக்குமா..
----------------
ஒத்தத் தூத்தல்
ஒடம்புக்கு ஒத்துக்காதுண்ணுதான்
ஒதுங்கி நிக்கிறேன்,
ஓடிப் போயிருக்கான்
ஒடம்ப நனைய வேலைக்காரப்பய
ஊட்டுக்கு-
கொட எடுக்கத்தான்…!
ஒத்துக்குமா-
ஒடம்புக்கு..
ஒலகத்துக்கு…!
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2009-05-01