வாழ்க்கை என்பது…
காதல் தோல்விகளும்
கடன் தொல்லைகளும்
கயிற்றை மாட்டவைக்கின்றன
கழுத்தில்..
காலம் முடியுமுன்னே
காலனை வரவைப்பது
கையாலாகாத்தனமல்லவா..,
ஊனம் உள்ளவன்கூட
உயிர்வாழும்போது
தானே உயிரை மாய்ப்பது
தலைகுனிவல்லவா
உன்னைப் படைத்தவனுக்கு.. !
விலைமதிப்பில்லா உயிரை
விடைகொடுத்து அனுப்பவேண்டாம்,
கடமையைச் செய்தால்
கலங்காது செய்தால்..
விலங்கல்ல வாழ்க்கை,
விபரம் புரிந்தால்
விலகும் திரைகள்,
இலகுவாய் வெற்றி
இனிதாய் உனக்கு,
இல்லைநேரம் சாவை நினைக்க..
வாழ்க்கை என்பது
வாழ்ந்திடத்தானே…!
காத்திருந்து…
இந்த
ஜன்னலோர ஜானகிகள்
காத்திருக்கிறார்கள்,
வருவான் ராமன்
வரதட்சணை வில்லை
உடைப்பானென்று…!
வரும் ராமர்களெல்லாம்
தேடிக்கொண்டிருக்கிறார்கள்
தங்க வில்லை…!
--செண்பக ஜெகதீசன்…
(www.geocities.com/vsnjag/)
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2007-11-11