சமரசமா.. முடித்திடு.. வழியில்..
01.
சமரசமா…
--------------
சமரசம் உலாவுமிடமென்றார்
சான்றோர்,
சாதிக்கொரு மயானம் வைத்துச்
சண்டையிடுகிறாயே மனிதா…!
விட்டுப் பார்ப்போம்…
கட்டிப் பிடித்திருப்பதை
விட்டு விட்டால்
விழுந்துவிடுவோம் என்பது
குட்டிக்கும் தெரியும்
குரங்குக்கும் தெரியும்…!
கெட்டதெனத் தெரிந்தும்
கெட்டியாய்ப் பிடிக்கிறானே
மனிதன்,
பட்டாலாவது திருந்துவானா
விட்டுப் பார்த்தால்தான்
விபரம் தெரியும்…!
02.
முடித்திடு…
-----------------
இனிமேல் வராது
இந்த இளமை,
வந்த முதுமை
வழி திரும்பாது,
பழியைப் போடாதே
பரமன் மீது,
இருக்கும் வரையில்
இயன்ற வரையில்
முயன்று முடித்திடு கடமையை,
வந்திடும்
வெற்றி உந்தன் உடமையாய்....!
03.
வழியில்...
-------------
வாழ்க்கை
வழிப்போக்கன் நான்,
வழியில் பார்த்தேன் -
காலம் என்னைக்
கடந்து சென்றது,
கண்ணாடியில் பார்த்தபோது
கண்டது -
களவாடப்பட்டது
என்
இளமைதான்...!
-செண்பக ஜெகதீசன்…
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2008-05-04