தமிழில்: மதியழகன் சுப்பையா
குழப்பம்
----------
கோடி முகங்கள்
அதன் பின்னே
கோடி முகங்கள்
இவை பாதையா
முட்களின் கூடா
பூமி மூடப் பட்டிருக்கிறது
உடல்களால்
எள் வைக்கவே இடமில்லை
எங்கே வைப்பது காலை
இதைப் பார்க்கும் போது
நிற்குமிடத்திலேயே
வேரூன்றி விடலாமென
எண்ணுகிறேன்
என்ன செய்ய முடியும்?
எனக்குத் தெரியும்
இங்கேயே நின்று விட்டாலும்
பின்னாலிருக்கும் பெருங்கூட்டம்
பாய்ந்து வந்து, அதன் பாதங்களால்
என்னை பசையாக்கிவிடுமென்று
அதனால், நடக்கிறேன்
என் பாதத்தின் அடியிலிருக்கும்
பரப்பில் மட்டும்
யாரோ ஒருவரின் மார்பில்
யாரோ ஒருவரின் புஜத்தில்
யாரோ ஒருவரின் முகத்தில்
நடந்தால் பிறரை
மிதிக்கிறேன்
நின்றால்
மிதிக்கப் படுகிறேன்
ஏ மனமே,
பெருமைப்பட்டுக் கொள்வாயே
உன் முடிவுகளுக்காய்
அப்படியானால் சொல்:
என்ன முடிவெடுத்துள்ளாய் இன்று
தமிழில்: மதியழகன் சுப்பையா
அம்பறாத்தூணி
ஜாவேத் அக்தர்
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2008-03-24 00:00