தமிழில்: மதியழகன் சுப்பையா

பசி
-- ஜாவேத் அக்தர்

பொழுது புலர கண்கள் திறந்து
மீண்டும் உயிர் பிழைத்தேன்
வயிற்றின் இருளிலிருந்து
மூளையின் புகைமூட்டம் வரை
பாம்பாய் ஊர்ந்தோர் எண்ணம்
இன்று மூன்றாவது நாள்
இன்று மூன்றாவது நாள்

அறையில் ஒருவித அமைதி
உறைந்து கிடக்கிறது
ஒரு தரை, ஒரு கூரை
நான்கு சுவர்கள்- என்னுடன்
எவ்வித தொடர்புமில்லாமல்
பார்வையாளர்களாய் பார்த்தபடி

எதிர் ஜன்னல் வழி
படுக்கையில் படரும்
சுடு வெயில் கதிர்கள்
குத்துகிறது முகத்தில்
உறவுகளின் கூர்மையோ
வேலி முட்களைப் போல்
ஏழ்மையைக் குத்திக் காட்டும்

கண்களைத் திறக்கிறேன்
வெறுமையாய் இருக்கிறேன்
ஓடு மட்டுமே மிஞ்சியிருக்கிறது

படுக்கையில் கிடக்கிறது
என்னுடைய பூத உடல்
ஜீவனற்றக் கண்களுடன்
அறையை அலசுகிறேன்
இன்று மூன்றாவது நாள்
இன்று மூன்றாவது நாள்

நன்பகல் வெம்மையில்
நடக்கிறேன் திக்கற்று
நீண்ட சாலையின்
இருபுறக் கடைகளிலும்
பார்வையில் பட்டது
பெயர்ப் பலகைகளை
வாசிக்க முடியாது
வந்து போகிறார்கள்
வழிப்போக்கர்கள்
அருகிலிருந்து கடந்தும்
மங்கலாகத் தெரிகிறார்கள்
முகமற்றவர்களைப் போல

பாதை நிரப்பும்
கடைகளில் பெருஞ்சத்தம்
கெட்டவார்த்தை வார்த்தைகள்
வானொலி ஓசைகள்
தூரத்தின் எதிரொலிகள்
அனைத்தும் கேட்கிறது

பார்ப்பது அனைத்தும்
கனவாய் தெரிகிறது
இருப்பது போலும்
இல்லாதது போலும்
நன்பகல் வெம்மையில்
நடக்கிறேன் திக்கற்று
எதிர்வரும் சந்தியில்
பார்வையில் படுகிறது
நீர்க் குழாய் ஒன்று

திடமாய் இருக்கும் நீர்
சிக்குகிறது தொண்டையில்
வயிற்றில் காற்று
நிரப்பியதாய் காட்சியளிக்கிறது
மயக்கமாக வருகிறது
உடலெங்கும் வேர்க்கிறது
இனியும் வலுவில்லை
இன்று மூன்றாவது நாள்
இன்று மூன்றாவது நாள்

எங்கும் இருள் சூழ
கரையில் நிற்கிறேன்
கல்லாலான படிகளில்
படுத்துக் கிடக்கிறேன்
என்னால் எழ முடியாது
வானத்தைப் பார்க்கிறேன்
வானமெனும் தட்டில்
நிலாவெனும் சப்பாத்தி
கனத்த இமைகள் தாழ்கின்றன
நிலவெளிகள் மறைகின்றன
சுழல்கிறது இவ்வுலகம்

வீட்டில் அடுப்பிருந்தது
தினமும் சமையல் நடந்தது
தங்கமாய் சப்பாத்திகள்
சுடச்சுடச் சாப்பாடு
திறக்கவில்லை கண்கள்
காரணம் நான் சாகப் போகிறேன்

மாறுபட்டவள் அன்னை
தினமும் உணவூட்டுவாள்
அந்த குளிர்ந்த கைகளால்
தீண்டுகிறாள் முகத்தை
ஆணைக்கு ஒரு பிடி
குதுரைக்கு ஒரு பிடி
கரடிக்கும் ஒரு பிடி
இது மரணமா?
இல்லை மயக்கமா?
எதுவானாலும் ஏற்புடையதுதான்
இன்று மூன்றாவது நாள்
இன்று மூன்றாவது நாள்

மொழிபெயர்ப்பு
மதியழகன் சுப்பையா

பிரசுரிக்கப்பட்ட திகதி: 2008-02-04 00:00
Share with others