ஓர் அழகிய வண்ணத்துப் பூச்சியை
நான் வரைகிறேன்-
தாளிலிருந்து அது பறந்துபோகும்வரை.
அதுவரை என்னை நான்
ஓர் ஓவியனாக பிரகடனப்படுத்துவதாயில்லை.

முகம்தொலைந்து
சதையிறுகிப்போய்விட்ட
மனிதக்கூடொன்றின் கையில்
துப்பாக்கி மட்டும்
பளபளக்கிறது.
எனது தேசத்து மலையுச்சியில்
தேங்கிப்போனதெல்லாம் இந்த மனிதனும்
எரிந்துபோன முகில்களும் மட்டுமே.

வெடிகுண்டில் பூவிரித்து
சமாதானச் சிரிப்பொழுக
முகத்தை சிரமப்படுத்தும்
மனிதர்களே!
வரையுங்கள் உங்கள் சமாதானத்தை,
இந்த மனிதன் எழுந்து நடக்கட்டும்-
விரல்நழுவி விழும் துப்பாக்கியுடன்.
குழந்தை தன் முகத்தில் நிலாவை வரையட்டும்.
நாயொன்று தன் வித்தியாசமான குரைப்பை நிறுத்தட்டும்.

எமது வீதிகளைவிட்டு அகன்றுகொள்ள
வேண்டியது
அந்நியர்கள் மட்டுமல்ல,
எனது இனத்து
சமாதானப் பொதியின் பூச்சாண்டிக்காரர்களும்தான்.

ஓர் அழகிய காலை
எனது விழிவழியே துள்ளியோட
முகம்கொள்ளா மகிழ்வுடன்
எனது பொழுதை நான் தொடங்க வேண்டும்.
பாடசாலைகள்
வேலைவெட்டிகள்
சனசந்தடிகள்
தாங்கியபடி...
மெல்லியதாய் மௌனப்படட்டும் எம் மாலைப்பொழுது.
என் உடலின் பிடிநழுவி
இருளில் மிதந்துசென்று,
சேதிகண்டு ஓடிவந்து
மீண்டும் வந்தமரும் விழிகளோடு
எப்போ நான் நடப்பேன்?
பொதிசொல்லும் குடுகுடுப்பைக்காரர்களே
போய்வாருங்கள்!

எனது மலையுச்சி மனிதன்
தன் உயிர்ப்புக்காய்க் காத்திருக்கிறான்.

பிரசுரிக்கப்பட்ட திகதி: 1998-01-01 00:00

கருத்துகள்

நன்றாக இருந்தது கவிதை

Share with others