மறக்க வைத்த நினைவு.. எ (உ)ன் வாழ்க்கை
01.
மறக்க வைத்த நினைவு
-------------------------------------
உன்னைப் பொத்தி வைக்கத்தான்
முயல்கிறேன் எனக்குள்.
நிலம் கீறி வெடிக்கிறது
உன் நினைவு.
பூவின் அனுமதி கேட்டுப் புறப்படுவது
இல்லை பூ வாசம்!
அப்படித்தான் நீயும்
இயல்பாய்ப் புறப்பட்டு விடுகிறாய்.
நீ வரும் வரையிலும்
நீயில்லாத மனத்தைக்
காவல் காப்பது கடினம்.
குழந்தையைத் தொலைத்து விட்டு
தேடி அலையும் தாய் போல்
உன்னைத் தேடி ஊரெல்லாம்
அலைகிறது என் மனது!
எங்கு தேடியும் கிடைக்காமல்
வெறுங் கையோடு திரும்புகையில்
புதையலாய் உன் பூ முகம்
சிரிக்கிறது என்னைப் பார்த்து!
என்னை அலைய வைத்த
கோபம் கூட மறக்கச் செய்கிறது
உன் ஒற்றைச் சிரிப்பு!!
02.
எ (உ)ன் வாழ்க்கை
----------------------------
உனக்கொரு வாழ்க்கை
எனக்கொரு வாழ்க்கை
இல்லை உனக்கு!
உன்னைப் பொறுத்தவரை
உலகம் ஒன்றுதான்
எல்லாரும் எல்லாமும்
எப்போதும் ஒன்றுதான்!
உனக்காகவும் இல்லாமல்
எனக்காகவும் இல்லாமல்
என் வாழ்க்கைதான்
இடையிலிங்கே
அடிபட்டுப் போய் விடுகிறது!
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2011-03-23