வலையும் வலமும்
-------------------------
தோழமையே...
உலகின் உன்னதம் நட்பாம்
சொல்கிறார்கள் இன்னமும்!
நானும் கூட நம்பியிருப்பேன் -
உன்னைக் காணாதிருந்தால்!
உலகின் சுகந்தங்கள் எல்லாம்
ஒன்றாய்த் திரண்டிருப்பதாக கருதி
இருப்பேன்
பறவை தேடும் வேடனாய்
உறவை நாடுவாய் நீ!
பறவைகளை நாடிய போதிலும்
அவன் பறவை நேயம் கொண்டோனில்லை
பறவையின் வலி எப்போதும்
வேடனுக்குப் புரிவதில்லை
நாடலும் புண்படுத்தி வெல்லலும்
அவன் இயல்பு!
கால எல்லைகளுக்குக் கட்டுப்படாமல்
வலிகொண்டலைய வேண்டியது
எதிர்ப்புத் திறனில்லாப் பறவைதான்!
வலி கொண்டலையும் பறவையின்
அழுகுரல் எவர் செவிகளையும்
எட்டியதில்லை
எட்டிய செவிகள் அவ்வுணர்வுகளை
உணர்வதுமில்லை
திறனில்லாப் பறவையும் கேளாச்
செவிகளும்
இருக்கும் வரை
வலை விரித்து நீயும் சுகமாய்
உலகை வலம் வரலாம்!!!
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2009-12-02