அந்த சாகரங்கள்.. வேகத்தில்.. விதிவிலக்குகளா
01.
அந்த சாகரங்கள்..
----------------------------
வரதட்சணை ஆறு
வற்றாமல் ஓடிக்கொண்டிருப்பதால்
ஜன்னல் சமுத்திரங்கள்
சற்றும் வற்றிவிடுவதில்லை..
அவை,
சாகா வரம்பெற்ற
சாகரங்கள்…!
02.
வேகத்தில்…
-------------------
விரும்பி கொண்ட உறவில்
விளைந்து
விரும்பாமல் பெற்ற பிள்ளையை
வீசி எறிகிறாயே வீதியில்,
இரும்பு இதயமா உனக்கு
கரும்பு மொழியாளே
கன்னித்தாயே
இன்னொரு கல்யாணமா,
இன்பமாய் வாழ்வாயா
இதை மறந்து…!
எதிலும் வேகம்தான்
எல்லாமே சோகம்தான்…!
03.
விதிவிலக்குகளா..
--------------------------
குளியல் அறையில்
வெள்ளைக் கண்ணாடி
வைத்துக்கொள்கிறது
விதம்விதமாய்ப் பொட்டு..
விதிவிலக்கா
விதவை நாங்கள்
வைத்துக்கொண்டால் பொட்டு…!
-செண்பக ஜெகதீசன்
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2009-03-09