அந்தக் கை.. அவன்தான்.. உயர்வானது.. அந்தக் கையெழுத்து..
---------------------------------------------------
அந்தக் கை…
-----------------
உன்
கதவைத் தட்டிடும் கை
மரணத்தின்
கையாக இருந்தால்,
கண்டிப்பாய் அது
திரும்புவதில்லை-
வெறும் கையாக…!
அவன்தான்…
-------------
கவிஞன்
கடவுளுக்கும் மேலானவன்-
படைப்பதோடு நிறுத்திக்கொள்கிறான்,
அழிப்பதில்லை
அவன்…!
உயர்வானது…
--------------
பிய்ந்துபோகும் கூட்டைப்
பிரியப்படும் பறவைக்குப்
பிடிப்பதில்லை
கடினமான கம்பிக் கூண்டு…
சிறை வாழ்வைவிட
பறந்து வாழும்
சுதந்திரத்தின் சுவையது
உயர்வல்லவா…!
அந்தக் கையெழுத்து…
--------------------
கோணல் மாணலாய்க்
காலதேவனின் கையெழுத்து-
காண்கிறோம் நாம்
தாத்தாவின்
கன்னச் சுருக்கங்களாய்…!
-செண்பக ஜெகதீசன்
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2008-11-04