மாசாய்…
காசிருந்தால் ஒருபேச்சு,
இல்லையெனில் ஒருபேச்சு,
இந்த மனிதனுக்கு என்னாச்சு,
இவன் கண்டுபிடித்தான் காசு.
இது ஆகிவிட்டது
இனத்துக்கே மாசு…!
இந்தக் கடையில்…
காசினி என்பது
காலதேவன் நடத்தும்
கள்ளுக் கடைதான்,
இங்கு
ஓசியில் குடிக்கவும்
காசுமிகக் குறைவாய்க் கொடுத்து
ஆசை மிகுதியில்
அதிகம் குடிக்கவும்
காத்திருப்பவர்கள்தான் -
மனிதர்கள்…!
கற்றாலும்…
கற்றுக்கொள்ள
கலாசாலைகள் இல்லாமலே
கற்றுக்கொள்கின்றன,
காட்டு மிருகங்கள்
அதனதன்
கலைகளை மட்டும்,
கலைபல
கற்கிறான் மனிதன்
கலாசாலையில்,
ஆனாலும்
கற்காலத்தைத்தான்
காட்டுகிறது அவன் பண்பு…!
கல்லாய்…
கல்லில் வடித்த சிலையினிலே
மனிதன்
கடவுளைக் காட்டுகிறான்,
கடவுள் படைத்த மனிதன்
ஏனோ
கல்லாய் மாறிவிட்டான்…!
வழியில்...
வாழ்க்கை
வழிப்போக்கன் நான்,
வழியில் பார்த்தேன் -
காலம் என்னைக்
கடந்து சென்றது,
கண்ணாடியில் பார்த்தபோது
கண்டது -
களவாடப்பட்டது
என்
இளமைதான்...!
அந்தநாள்…
காலையில்
கண்விழித்து எழுந்தால்தான்
மனிதனுக்கு அது
மறுநாள்,
அல்லது அது
அவன் நினைவு நாள்…!
நல்ல தாய்.
நல்லதாய்
நாகரீகமானதாய்
தாகம் தீர்ப்பதாய்
தரித்திரம் போக்குவதாய்
சரித்திரம் படைப்பதாய்
சாதாரணமாய் இல்லாததாய்
வேதனை தீர்ப்பதாய்
வெற்றியைத் தருவதாய்
சுற்றம் சேர்ப்பதாய்
சூழ்ச்சி அறுப்பதாய்
வாழ்த்தி நிற்பதாய்
வரம்பல தருவதாய்
சிரமம் குறைப்பதாய்
சீரெலாம் செய்வதாய்
பாரெலாம் உயர்வதாய்
பலனை எதிர்பாராததாய்
உலகுக்கு உதவுவதாய்
உயிரைத் தருவதாய்
உள்ளவள் தாய் -
உன்னைப் பெற்ற தாய்...!
--செண்பக ஜெகதீசன்…
(www.geocities.com/vsnjag/)
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2008-10-11