எழுதப்படும் வரலாறு…நாடகமாய்… முற்றுப் புள்ளி… இன்று மட்டும்…
எழுதப்படும் வரலாறு…
-------------------------
விழுந்தவன்
எழுந்திருக்கும்போதுதான்
எழுதப்படுகிறது,
ஒரு
வெற்றியின் வரலாறு…!
நாடகமாய்…
--------------
முன் அனுபவங்களை
மேலுக்குத் தெரியாமல் மறைத்து,
நாலு சுவர்களுக்குள் நடக்கும்
நாடகம்தான்-
முதலிரவு என்பது…!
முற்றுப் புள்ளி…
--------------------
இரவின் பயணத்திற்கு
இவள் வைக்கிறாள்
முற்றுப்புள்ளி-
முற்றத்தில் புள்ளிவைத்து
முறையாய்க் கோலமிட…!
இன்று மட்டும்…
--------------------
சென்ற ஆண்டுகள்
சென்றது எங்கே,
இனி
வரும் ஆண்டுகள்
இருப்பது எங்கே
தெரியவில்லை எவர்க்கும்,
தெரிந்தது இதுதான்-
இன்று,
இன்று மட்டும்..
இருக்கிறது அது
இப்போது நம்முடன்,
தப்பாது செய்திடு கடமையை,
இன்றுபோல் இருக்கும்
என்றும் இனிதாக…!
-செண்பக ஜெகதீசன்
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2008-06-09