கண்ணீர் துளிகள்
-------------------------
வயதோ பதினான்கு
வயதுக்கு மீறிய வளர்ச்சி
உடலில் மட்டுமல்ல எண்ணங்களிலும் தான்
வாழ்க்கை என்றால்
என்னவென்றே தெரியாத அந்த
வயதுக்கு வராத சிறுமிக்கு
வாழ்க்கை பிரச்சினை
வழக்காக வந்தது
வழக்காட வந்தாள்
வழக்கு மன்றத்தில் வழக்கறிஞர்கள்
வாழ்க்கையை வழக்காக பார்க்கும்
வல்லமை படைத்த வல்லுனர்கள்
வாழ்வின் பெரும்பகுதியை
வழக்குகளோடு கழித்த
வயதான நீதிபதி
வந்தார் அமர்ந்தார் அவள்
வழக்கை கேட்க ஆயத்தமானார்
வார்த்தைகளா அவைகள் ?
வதைபட்டு சிதைவுற்று காயம்பட்ட
மனம் அள்ளி தெரித்த நெருப்பு கணைகள்
எனக்கு எட்டு வயதிற்குள்
எல்லா அசிங்கங்களும் தெரிந்து விட்டது
காதலோ பத்து வயதில்
கலர் கலராய் வானவேடிக்கை காட்டியது
கட்டி பிடித்து தரும் முத்தம் என்
கனலை கூட்டியது பதினோராம் வயதில்
ஓடி போகலாம் வாழ்க்கை நடத்தலாம் என்பதை
ஓராண்டுக்கு முன் தெரிந்து கொண்டேன்
இதனையும் சொல்லி தந்த
ஆசான் கள் யார் தெரியுமா?
தான் வாழும் சமுகத்தை
தரங்கெட்ட நரகமாக்கும்
இன்றைய எழுத்து வேந்தர்களும்
இயக்குனர் செம்மல்களும் தான்
திரைப்படங்கள் என்னை
தடம் புரள சொன்னது
காமத்தில் கரை காண தூண்டியது
தொலைகாட்சி நாடகங்களோ என்னை நானே
தொலைத்துக் கொள்ள வழிகாட்டியது
வாழ்க்கை தொடங்குவதற்கு முன்பே
வயிற்றில் மூன்று மாத கரு
கருவைச் சுமந்தவளாய் நான்
களங்கப்பட்டவளாய் நான்
களங்கப்படுத்தியதோ
காமத்தை அறியாத விடலைசிறுவன்
அகவை பதினாறுக்குள்
கற்பழிப்பு வழக்கை அவன் மேல் தொடரலாம் என்
கற்புக்கு ஓர் விளையும் வாங்கி தரலாம்
என் வாழ்க்கைக்கு என்னை
பெண் சுகம் என்றால் என்னவென்றே தெரியாமல்
என்னை கெடுத்தவனுக்கு
தன வாலிபத்தில் பெரும்பங்கை
சிறையில் கழிப்பவனுக்கும்
என்ன தரபோகிறது ?
இந்த சமூகமும் நீதி மன்றமும்
என் தாய் மாண்டு போனாள்
நான் கேட்டு போன செய்தி கேட்டு
என் தகப்பன் மாயமானான்
நான் கர்ப்பம் தாங்கி நின்றதை கண்டு
என்னோடு பிறந்தவளோ
தானே தனித்து போய் அநாதை ஆனாள்
இன்று இந்தவழக்கு முடியும் வரை
இரக்கத்தோடு உச் கொட்டும் சமூகம்
நாளை என்னை எப்படி பார்க்கும்?
பதினாலு வயதிலேயே
பத்தினி தனம் விட்டவள் தானே என்று
தொட்டு பார்க்கும் துணிந்து
படுக்கை போட்டு முந்தி விரிக்க சொல்லும்
இத்தனையும் இழைத்த
இன்றைய இயக்குனர் எழுத்தாளர்களை
இந்திய தண்டனை சட்டம் தண்டிக்குமா ? இல்லை
இந்த அவலங்கள் தொடராதிருக்க
காதலை கடை சரக்காக்கும்
கயமைக்கு தடை விதிக்குமா ?
வழக்கறிஞர்கள் கேட்டனர் அவள்
வாழ்க்கையை
வழக்கின் வட்டத்திற்குள் அடைத்தனர்
வழக்கின் விளிம்பில் நின்று
வாழ்க்கை முடிவுக்கு கொண்டு வந்தனர்
என்னை கெடுத்தவனுக்கு எட்டாண்டு சிறை
எனக்கோ வாழ் நாள் முழுவதும் வதை
வாழ்க இன்றைய திரைப்படங்கள் நாடகங்கள்