பொதுவாகவே வாசகத்தனத்தில் கவிதைகள் என்பது உணர்வுகளின் பிரவாகம் என்கிற கருத்து உண்டு. எழுகின்ற உணர்வுகளைப் படைப்பாக்கித் தரும் வல்லமை, தேர்ந்த படைப்பாளர்க்கு மட்டுமே சாத்தியம். இதை மனதில் கொண்டு, வேதா இலங்காதிலகம் அவர்களின் "உணர்வுப் பூக்கள்" தொகுப்பை வாசிக்கிறபோது, முதல் பாரா முற்றிலுமாகப் பொருந்துகிறது வேதா-இலங்காதிலகம் இருவருக்கும். அம்மா, அப்பா, தம்பி, தங்கை, உறவுகளை, ஒரே நடிப்பு நட்சத்திரமாக மிளிரும் நடிகர் திலகத்தை, மழை, நதி, அருவி என இயற்கையை… எல்லாம் ஒரு உணர்தலின் உணர்ந்ததின் கவிதைகளாகவே இருக்கின்றன. ஆரம்பப்பள்ளி மாணவனுக்கும் பிடித்துப்போகிற நடை, பிற மொழிக் கலப்பு இல்லாத தமிழ் வாசம், தொகுப்பு முழுவதும் மணக்கிறது. வேதாவின் கவிதைகள் அனைத்தும் ஏதேனும் ஒரு தளத்தில் பயணித்த கவிதைகளாக இருப்பது மகிழ்வைத் தருகிறது. பெரும்பாலும் வானொலியில் வலம் வந்திருப்பது நல்ல விசயம் தான். வேதாவின் கவிதைகளில், நாற்சார வீட்டில் மாட்டியது, தலைப்பிலான கவிதை நவீனத்துவ சாயலில் இருக்கிறது. மாதாழை, மழையிருட்டு போன்ற சொற்கள் கவிதைக்கான ருசியைக் கூடுதலாகத் தருகின்றன. அனைத்து உணர்வுப் பூக்களும் அன்பு வாசத்தின் அடையாளமாய் இருக்கையில் நூலுறவு, சாம்பலில் உதித்த அறிவுக்கதிர் ஆகிய இரண்டு கவிதைகளும் அறிவின் வாசமாய் இருந்தன. இந்த இரண்டு கவிதைகளையும் வர்ணிப்போடு நில்லாமல், எரிதல் தந்த வலியையும் சொல்லி இருக்கலாம் என்றே தோன்றுகிறது.(எரிந்த நூலகத்தை எழுதுகையில் வலிதான் பேச வேண்டும்). இந்தத் தோன்றலை இலங்காதிலகத்தின் சில கவிதைகள் முன்மொழிகின்றன. அன்னியக் காற்று, கனவு, பிணக்குழி, வாழ்வுக்காய் வதைபடுகிறோம், வதைபடுதலில் வாழுகிறோம் கவிதைகள் மெல்லிய வலியோடு பதிவாகியுள்ளன. "வாழ்வா சாவா போராட்டம், பூவா தலையா தடுமாற்றம்" நல்ல பதிவு. "யாழ்ப்பாணம்" கவிதையில் மெல்லிய வலி கூடுதலாகி இருக்கிறது. தமிழ் தேசியம் பேசும் "இரவல் தத்தம் இரவல் கொள்ளி" கவிதை இன்றைக்கும் பொருந்துவதாய் இருக்கிறது. உணர்வுப்பூக்கள் மன ஓட்டத்தின் அளவைப் பிரதிபலிக்கின்றன. எளிமை வரிகள், புரிதலான கருத்துக்கள். வளரும் படைப்பாளிகளுக்கு இந்தத் தொகுப்பு ஒரு நல்ல வழிகாட்டி. வளர்ந்தவருக்கு இந்த நூல் பத்தோடு பதினொன்று. நல்ல தமிழ் சொற்கள் அடங்கிய தொகுப்பு.
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2009-03-29 00:00