இலண்டனில் இருந்து இயங்கும் ஐ.பீ.சீ. அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் சர்வதேச ஒலிபரப்பில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் பிரித்தானிய நேரம் காலை 07.00 முதல் 10.00 வரை ஒலிபரப்பப்படும் “காலைக்கலசம்” நிகழ்ச்சியில், “இலக்கியத் தகவல் திரட்டு” என்ற பகுதி காலை 7.15 முதல் 8.00மணி வரை சுமார் 15-20 நிமிடங்கள் ஒலிபரப்பாகின்றது. நூலகவியலாளர் என்.செல்வராஜா அவர்களால் தொகுத்து வழங்கப்படும் இந்த வாராந்த நிகழ்ச்சியின் எழுத்துப் பிரதி இதுவாகும்.
ஓலியலை: 13.01.2008
அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ் நிகழ்ச்சிகளை தவறாமல் கேட்டுக் கொண்டிருக்கும் அறிவார்ந்த நேயர்களுக்கு முதலில் என் அன்புகலந்த வணக்கம். மீண்டும் இந்தவாரம் மற்றுமொரு காலைக்கலசம் நிகழ்ச்சியில் உங்களைச் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன்.
இன்றைய நிகழ்ச்சியில் முதலாவதாக டென்மார்க் நாட்டின் ஓகுஸ் நகரிலிருந்து வேதா இலங்காதிலகம் அவர்கள் எழுதி, சென்னை மணிமேகலைப் பிரசுரத்தின் மூலம் அண்மையில் வெளியிட்டுள்ள உணர்வுப் பூக்கள் என்ற தலைப்பிலான கவிதைத் தொகுதியொன்றின் அறிமுகத்திற்கு வருகிறேன்;. வேதாவின் கவிதைகள் என்ற கவிதைத் தொகுதியினை முதன்முதலில், ஏப்ரல் 2003இல் வழங்கியதன் வாயிலாக இலக்கிய நூல் வெளியீட்டுத்துறையில் தன் காலடிகளைப் பதியவைத்த வேதா இலங்காதிலகம், டென்மார்க்கில் டேனிஷ் மொழியில் குழந்தைகள் இளையோர் சம்பந்தமான பராமரிப்புப் பயிற்சி பெற்றவர். ஐரோப்பிய தமிழ்த் தொலைக்காட்சிகள், வானொலிகள், பத்திரிகைகள், சஞ்சிகைகளில் இவரது கலை இலக்கியப் படைப்புக்கள் ஏராளமாக வெளியாகியுள்ளன. இன்றும் வெளியாகிவருகின்றன.
இவரது குழந்தைகள் பராமரிப்புப் பயிற்சியின் அனுபவங்களையும், தேடல்களையும் பிரயோகித்து டென்மார்க்கில் டேனிஷ் மொழியில் சஞ்சிகைகள், பத்திரிகைகளில் வெளிவந்த பல விஞ்ஞான அறிவியல் கட்டுரைகளைத் தேடிப்பெற்று அவற்றில் தேர்ந்தெடுத்த பலவற்றை தமிழில் மொழிபெயர்த்து புலத்தில் வாழும் நம் தமிழ்க் குழந்தைகள் இளையவர்கள் படித்துப் பயன்பெறும் வண்ணம் குழந்தைகள் இளையோர் சிறக்க என்ற தனது இரண்டாவது நூலையும் வேதா இலங்காதிலகம் 2004இல்; வெளியிட்டிருந்தார். அது குழந்தைகளுக்கான நூல் என்பதைவிட அவர்களை வளர்க்கும் பெற்றோர்களுக்குரிய சிந்தனையைத் தூண்டும் நூல் என்று கூறுவதே பொருத்தமாகவிருக்கும்.
உணர்வுப்பூக்கள் என்ற தனது மூன்றாவது நூலை மற்றொரு கவிதைத் தொகுப்பாகத் தனத கணவருடன் இணைந்து இப்போது 2007இல் வழங்கியிருக்கும்; வேதா இலங்காதிலகம் அவர்கள் 1976ஆம் ஆண்டிலேயே இலங்கை வானொலியில் தன் முதல் கவிதைக்குக் களம் கண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. 1987இல் டென்மார்க்கிற்குப் புலம்பெயர்ந்த பின்னரும் தொடர்ந்து பல்வேறு ஊடகங்களின் வாயிலாகவும்; தன் கவிதைகளைக் காலத்துக்குக் காலம் இவர் வழங்கிவந்துள்ளார்.
பக்திப் பூக்கள், பெற்றோர் பாசப்பூக்கள், மழலைப் பூக்கள், மழலைப்பாடல் பூக்கள், இயற்கைப் பூக்கள், கதம்ப உணர்வுப் பூக்கள், பெண்மைப் பூக்கள், விண்ணேகியோருக்கு, பொது, என்று ஒன்பது பகுப்புகளில் தனத படைப்புகளையும், பத்தாவது பகுப்பாக க.இலங்காதிலகத்தின் கவிதைப் பூக்கள் என்ற பகுதியையும் இந்நூலில் உள்ளடக்கி- இந்தப் பத்துப் பிரிவுக்குள்ளும் அண்மைக்காலத்தில் வானொலியிலும், பிற ஊடக நிகழ்வுகளிலும் பாடிய கவிதைகளைத் தொகுத்தும் வகுத்தும் வேதா இலங்காதிலகம் இந்த உணர்வுப்பூக்களில் மணம் பரப்பவைத்துள்ளார்.
இத்தொகுப்பில் கவனத்தை ஈர்க்கும் மற்றொரு அம்சம் என்னவென்றால் முதல் ஒன்பது பிரிவுகளுக்குள்ளும் தனது 69 பாடல்களை தொகுத்திருக்கும் வேதா இலங்காதிலகம், பத்தாவது பிரிவுக்குள் தன் கணவர் க.இலங்காதிலகம் எழுதிய 43 கவிதைகளையும் மேலதிகமாக இணைத்திருக்கிறார் என்பதாகும். இவரது நூலுக்கு அணிந்துரைகளை இருவர் வழங்கியுள்ளனர். சுவிஸ் - பாசல் நகரிலிருந்து ஏ.ஜேஞானேந்திரனும், ஜேர்மனியிலிருந்து பூவரசு ஆசிரியர் இந்த மகேஷ் அவர்களும் இவ்வணிந்துரைகளை எழுதியுள்ளனர். இவர்கள் இருவரும் கணவர் க.இலங்காதிலகத்தின் 43 படைப்புக்கள் பற்றி ஒரு வரியேனும் எழுதவில்லை. வேதா இலங்காதிலகம் எழுதியுள்ள இரண்டு அறிமுகக் குறிப்புகளில் இரண்டாவதில் கணவரின் படைப்பிலக்கிய அறிமுகம் பற்றி நிறையவே குறிப்பிட்டுள்ளார். அதில் ஒரு வரியில் பிற்சேர்க்கையாகத் தன் கணவரின் படைப்புக்கள் சேர்க்கப்பட்டமையை அணிந்துரை எழுதியவர்கள் அறிந்திருக்கவில்லை என்ற குறிப்பு வருகின்றது.
அந்தவகையில் உணர்வுப்பூக்களின் இணை ஆசிரியர்களாக திருமதி வேதா இலங்காதிலகமும், திரு. கனகரத்தினம் இலங்காதிலகமும் அமைகின்றனர். தன் கணவரின் கவிதை ஆர்வமே தன்னுள் கவிதைச் சுடர் ஏற்றியது என்று கூறும் வேதா இலங்காதிலகம் வழங்கியிருக்கும் உணர்வுப் பூக்கள் கவிதைத் தொகுதியின் உள்ளே சற்று நுழைவோம்.
பக்திப்பூக்கள் என்ற முதற்பகுப்பினுள் விநாயகரையும் கண்ணனையும் பாடிப்புகழ்ந்தபின், பெற்றோரையும் குடும்பத்தினரையும் நினைந்துருகும் பெற்றோர் பாசப்பூக்கள் என்ற பிரிவுக்குள் பாவடி புனைய, முதலெழுத்தானவர், இதயத்தில் கொலு, என்னாசை அப்பா, என்ற தலைப்புகளில்; தன் தந்தையை நினைத்தும், அம்மா, அனுராகமான பல்லவி அனுபல்லவி, ஆகிய தலைப்புகளில் தன் தாயாரை நினைந்தும் பாடிய பாடல்களுடன், அற்றைப் பிறைநிலவு, சுற்றுலாப்பிரியன் ஆகிய பாடல்களில் தன் பிள்ளைகளுடனும் கவியுறவாடியிருக்கிறார் வேதா.
மழலைப்பூக்கள் என்ற பிரிவுக்குள் குழந்தைகள் பற்றிப்பாடும் வேதா அதனையடுத்த மழலைப்பாடல் பூக்கள் என்ற பிரிவுக்குள் சிறுவர் பாடல்கள் சிலவற்றைச் சேர்த்துள்ளார். இயற்கைப் பூக்கள் என்ற பிரிவுக்குள் நயாகராவையும், உள்ளுர் கடல் அலைகளையும், வானத்திலிருந்து விமானத்தின் சாளரத்தினூடு தெரியும் இலங்கையின் கரையோரக்கோடுகளையும் தாம் இயற்கையின் அழகில் தம்மைத் தொலைத்துவிட்ட நேரங்களையும் அழகாகப் பாடிப்பதிவுசெய்கின்றார்.
தாயகத்தை விட்டுத் தொலைதூரம் வந்துவிட்ட போதும் காலம் கடந்தும்கூட இன்றுவரை தாயக எண்ணங்களே அவரது கவிதைகளில் பெரும்பாலும் பதிவு செய்யப்படுகின்றன. தாயகத்துக் கிராமத்தின் கனவுகளையும் இவற்றில் பல கவிதைகள் பதிவு செய்கின்றன. தான் புலம்பெயர்ந்து நீண்டகாலம் வாழும் டேனிஷ் மண்பற்றியோ, அதன் மக்கள் பற்றியோ இவரது கவிதைகள் எதுவும் இத்தொகுதியில் பேசப்படவில்லை.
வேதாவின் கவிதைக் களங்கள் எங்கெங்கெல்லாமோ நிலைகொள்கின்றன. இயற்கையையும், ஈழத்தின் நீங்காத நினைவுகளையும் ஏன் மொசப்பத்தேமியாவின் நாகரீக உயர்வையும் மெச்சிப் பாடும் இவர் தீபம் தொலைக்காட்சியில் அன்புள்ள சினேகிதியே என்ற சின்னத் திரைத்தொடரின் 50ஆவது நிகழ்வை அறிந்து அதற்கும் வாழ்த்துக் கவிதை பாடியிருக்கிறார்.
இறுதிப் பிரிவுக்குள் அடங்கியுள்ள திரு. இலங்காதிலகத்தின் கவிதைகள் வகைபிரிக்கப்படவில்லை. அதில் ஒரு கவிதை மலையில் பிறந்த ஆரணங்கே- என்பது. ஈழத்தின் மலையகத்தைப் பாடும் அழகிய இயற்கையோடியைந்த கவிதை இது. 1977இல் பூவும் பொட்டும் மங்கையர் மஞ்சரியில் திருமதி இராஜேஸ்வரி சண்முகத்தின் வாசிப்பில் அரங்கேறியுள்ளது. முப்பது வருடங்களுக்கு முன்னரே ஆழம் கண்டுள்ள இவரது கவிதை உணர்வினை இப்பொழுதுதான் காணக்கிடைத்திருக்கின்றது. திரு.க.இலங்காதிலகத்தின் கவிதைகளைத் தனியாகத் தொகுத்துத் தனிநூலாக்கியிருக்கலாமே என்ற எண்ணத்தை இத்தொகுப்பின் பின்னிணைப்பில் காணப்படும் 43 கவிதைகளும் ஏற்படுத்தியிருந்தன.
தன் கணவரின் கவிதை ஆர்வமே தன்னுள் கவிதைச் சுடர் ஏற்றியது என்று கூறிய வேதா இலங்காதிலகத்தின் வரிகளின் அர்த்தம் திரு. இலங்காதிலகத்தின் கவிதைகளுள் நுழைந்து வெளிவரும்போது ஆழமாக உறைக்கின்றது. திரு இலங்காதிலகம் எழுதியுள்ள நான் பார்த்த ஈழம் நலமில்லை என்ற கவிதை 2003இல் எழுதப்பட்டுள்ளது. இன்றும் அதன் வரிகள்- நாண்காணடுகள் கடந்த நிலையில் பொருந்துகின்றன. யாழ் நூலக எரிப்பு பற்றிய இவரது கவிதை வஞ்சகனால் எரிந்தது நூலகம் என்ற தலைப்பில் காணப்படுகின்றது. நூலக எரிப்பினால் ஒரு சாமானியனின் மனம் படும் வேதனை அதில் புரிகின்றது.
நூலகம் எரித்த நாள் மே 31 என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளமையும் என் கவனத்தை ஈர்த்தது. யாழ்ப்பாண நூலகம் மே மாதம் 31ம் நாள் நள்ளிரவின் பின்னர் எரிக்கப்பட்டது என்பதே வரலாறாகும். அதாவது 1981 ஜுன் 1இன் விடிவுக்கு முந்தைய பொழுது. யாழ்ப்பாண மாநகர மேயராக இருந்த இராஜா விஸ்வநாதன் ஒழுங்குசெய்திருந்த யாழ்ப்பாண நூலக எரிப்பின் முதலாவது நினைவுதினக்கூட்டத்தை நடத்திய வேளையில் உத்தியோகபூர்வமாக யாழ் நூலக எரிப்பினை ஜுன் 1ம் திகதியாகவே குறிப்பிடவேண்டும் என்று அவர் பதிவுசெய்திருந்தார். அதன் பின்னர் வரலாற்றுப் பதிவுகளில் யாழ் நூலக எரிப்பினை ஜுன் 1ம் திகதி என்றே குறிப்பிட்டு வருகின்றோம். திகதிக் குழப்பத்தைத் தவிர்த்துக்கொள்ளும் வகையில், எதிர்காலத்தில் இத்திகதியையே நாங்கள் புகலிடப் பதிவுகளிலும் பின்பற்றவேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.
வணக்கம்.
N.Selvarajah. Prepared for Kalai Kalasam, IBC Tamil 4.1.2008
All Rights Reserved. No part of this Documentation may be reproduced or utilised, stored in a retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording or otherwise, without the prior written permission of the copy right owner.
குறிப்பு: மறு பிரசுர உரிமை கவிஞரால் பெறப்பட்டது
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2008-01-08 00:00