எய்ட்ஸ்
காலனுக்கான காமனின் கடிதம்
சிலரால்
அஞ்சல் செய்யப்படும்
அவர்களுக்கும்
அஞ்சலி
இது-
வாங்குபவரும் விற்பவரும்
நட்டப் படுகிற
விசித்திர வியாபாரம்
பாருங்கள்
இந்தப் பாலுறவு விபத்து
கருவறைகளின்
சுவாசப்பையாயிருந்த
பள்ளியறைகளையே
கல்லறைகளின்
இரைப்பையாக்கி விட்டதே
ராமனாயிருந்தால்
காத்திருப்பது சீதை
காமனாயிருந்தால்
காத்திருப்பது சிதை
பத்தினி வரும்வரை
பட்டினி கிடக்க
சூளுரை எடு
அடங்காப்பசியா...?
’ஆணுறை’யாயினும் இடு
பல பேரைத் தழுவிய வேசி
கொதிநீரைத் தழுவாத ஊசி
சோதிக்கப்பட்டது எடுக்கும் இரத்தம்
காயம்பட்ட இதழ் கொடுக்கும் முத்தம்
இவைகளே
எய்ட்ஸின் உலகு
எதற்கு நமக்கு ? விலகு
கண்ட கண்ட
’மெய்‘ எழுத்துக்களோடு
கலந்ததில்
உருகிக்கொண்டிருக்கிற
சில
’உயிர்‘ எழுத்துக்கள்
குற்றெழுத்தாய்க்
குறுகிக்கொண்டிருக்கின்றன
அவைகளை நோக்கி
ஆயுத எழுத்துக்களை
அல்ல...
ஆறுதல் எழுத்துக்களை
நீட்டுவோம்
நன்றி : ஆனந்தவிகடன்