கேள்வியில்லாத சடங்கு
ஆதி பராசக்தி ஆளானது
ஆடிப்பூரத்திலாம்
அம்மா சொல்கிறாள்
ஆசிரியர் சொல்கிறார்
அம்மன்கோவில் ஐயர் சொல்கிறார்
அந்த அதிசயத்தை
ஆர்வத்துடன் கவனித்து
ஆவணமாக்கி வைத்த
அ(ஆ)திமானுஷன்தான் யாரோ?
பத்துரூபா நோட்டு
மானுஷம் என்றது படுபொய்
விழுமியம் என்றது புழுகு
சமூகஅக்கறை என்றது பேத்தல்
நாணயம் என்றது சும்மா
கண்ணியம் என்றதும் கதைதான்
விசாரங்களாலென்
தூக்கம் கலைத்தது
பஸ் கண்டக்டர் தவறுதலாய்தந்து
நெஞ்சுப் பாக்கெட்டில் வைத்துக்கொண்ட
அம்மேலதிக பத்துரூபா நோட்டு.
உச்சம்
ஊடல் மனைவியை
தாஜா செய்யவேண்டி
அப்போது ஞாபகத்துக்கு வந்த
ஒரு அறுதப்பழசு நகைச்சுவையை
எடுத்துவிட்டேன்
அவள் "அறுவை" என்றுவிட்டு
விலகியிருக்கலாம் கேட்டுச்
சிரித்துவைத்தாள் பாருங்கள்
என்குற்றவுணர்வு
உச்சத்துக்கு
எகிறியது அப்போதுதான்!
வேண்டுவதெல்லாம்..........
சொர்க்கங்கள் ஏட்டில் இருக்கட்டும்
நமக்கு இருத்தலும் இவ்வாழ்வுமே போதுமே
இயற்கை குழம்பாத பூமியும் என்றும்
பசுமைவயல்களும் பயிர்களும்
அமைதி காத்திடும் கடலுடன்
மாசு கலவாத காற்றும் போர்
மேகங்கள் சூழாத பொழுதும் எங்கள்
மண்ணும் மரங்களும்தண்ணீரும்
ஒதுங்க ஓர் எளிய குடிசையும்
ஒற்றுமை சூழும் கிராமமும்
உழைக்கச் சலித்திடா மக்களும்
அன்பில் தளைத்திடுஞ் சுற்றமும்
புது வையகம் படைத்திடும் ஆசையும்
வேண்டு வதெல்லாம் இஃதுதான்
வாழ்வு தன்பாதையில் செல்லுமே......................!
05.05.1999
சர்வ நிச்சயம்
நினைவறிந்த நாளிலிருந்து இருட்டு
இடுகாடு சுடுகாடு எதுவென்றாலும் பயந்தான்
அறியாத ஊர்களில் இறுதியூர்வலங்களையும்
தெரியாத நபர்களின் சவ அடக்கங்களையும்
முடிந்தவரை விலக்கி நடந்துள்ளேன்.
சர்வ நிச்சயமாய்
என்னையும் ஒருநாள்
தூக்கிவந்தொரு காட்டில்
"இன்றிலிருந்து இங்கே தூங்கடா ராஜா"
என்று கிடத்திவிடத்தான் போகிறார்கள்
இருந்தும் எதுக்கென்றுதெரியவில்லை
இருட்டு இடுகாடு சுடுகாடு
எல்லாவற்றுக்கும் இன்னும் பயம்தான்.
அண்மையும் சேய்மையும்
சுயம்வரத்தின் பின் ஸ்ரீராமன்
சமஸ்கிருதத்தில் முணுமுணுத்தான்:
" உப்பரிகையில் ஜொலித்த அழகு
அணுக்கப் பார்வையில் இல்லை, ஹ¨ம்........!"